shadow

elangovanசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா, மிக விரைவில் மீண்டும் முதல்வராக பதவியேற்க ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் “‘ஜெயலலிதாவுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் அவர் முதல்வர் பதவியை ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

நேற்று திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளியில் அமையவுள்ள அனல் மின் நிலையத்திற்கு எதிரான போராட்டக் குழுவினரை சந்தித்து அவர்களுடைய பிரச்சனை குறித்து கேட்டறிந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஒரு நிருபர் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பில் எழுந்துள்ள பிழைகள் குறித்து கருத்து கேட்டபோது, :”கூட்டல் கழித்தல் கணக்கு போடக்கூட தெரியாதவர்கள் எல்லாம் உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக வருவதன் அலங்கோலம் இப்படித்தான் இருக்கும். ஜெயலலிதாவை பொறுத்தவரையில் முதலில் பொறுப்பேற்பதும், பின்னர் வீட்டுக்கு போய் இருப்பதும், பின்னர் மீண்டும் பொறுப்பேற்பதும் வாடிக்கையான ஒன்றுதான். ஜெயலலிதாவுக்கு கொஞ்சமேனும் மனசாட்சி இருக்குமானால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை அவர் முதல்வராக பொறுப்பேற்காமல் காத்திருக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் தமிழக காங்கிரஸ், கர்நாடகா அரசை வற்புறுத்த வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. ஏனென்றால் இந்த வழக்கிலே பல முறைகேடுகள் நடந்திருக்கின்றன. இதை எல்லா பத்திரிகைகளும், ஊடகங்களும் ஆதரத்தோடு சொல்லிக் கொண்டிருக்கிற நேரத்தில், வழக்கை மறுபரிசீலனை செய்து உரிய தண்டனையை ஜெயலலிதாவுக்கு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் இருக்கிற சாதாரண மக்களுக்கு நீதித்துறை மீதுள்ள நம்பிக்கையே போய்விடும்”

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் இந்த பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply