shadow

நான் நினைத்திருந்தால் முதல்வராகி இருக்க முடியும்: டிடிவி தினகரன்

ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஜீவாதார பிரச்சனையாக காவிரி பிரச்சனை உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. பிப்ரவரி 14-ந்தேதி வந்த தீர்ப்பு உங்களுக்கு நன்றாகவே தெரியும். 6 வார காலத்துக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. இதை செய்யாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதற்கு நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

தற்போது மத்திய அரசுக்கு நீதிமன்றம் வருகிற மே மாதம் 3-ந்தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று கூறி உள்ளது. ஆனால் கர்நாடாகவில் தேர்தல் நடக்க உள்ளதால் குறிப்பிட்ட காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே மத்திய அரசு 7½ கோடி மக்களின் பிரச்சனையாக உள்ள இந்த பிரச்சனையை விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையாக உள்ள இந்த பிரச்சனையை ஆராய்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வம் யாரால் அரசியலுக்கு வந்தார்?. யாரால் முதல்வரானார்? என்பது தமிழக மக்களுக்கு தெரியும். அவர் பதவி ஏற்றதும் அவரது சுயரூபம் தெரிய வந்தது. மத்திய அரசுக்கு அவர் காவடி தூக்கி வந்ததால் அவரை பதவியில் இருந்து விலக்கினோம்.

அதன் பின்னர் தொண்டர்கள் விரும்பியதால் சசிகலாவை முதல்வராக்க விரும்பினோம். நீதிமன்ற தீர்ப்பால் அவர் முதல்வராக முடியாமல் போனது. அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்ற பெயரில் போலி யுத்தம் தொடங்கினார்.

அவருக்கு ஆதரவாக 11 எம்.எல்.ஏ.க்களும், 12 எம்.பி.க்களும் அவர் பின்னால் சென்றனர். ஆனால் இன்று அவர்கள் நடுரோட்டில் நிற்கிறார்கள். அதேபோன்று ஈ.பி.எஸ்.சை முதல்வராக்கியது சசிகலாதான். ஓ.பி.எஸ் மாதிரியே ஈ.பி.எஸ்.சும் சசிகலாவுக்கு துரோகம் செய்தார். குதிரை குப்புற தள்ளியது மட்டுமல்லாமல் குழிதோண்டி புதைத்தது போல் என்னையும் பதவியில் இருந்து தூக்க முயற்சி செய்தார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை நான் தொடங்கினேன். அந்த கட்சி கொடியில் ஜெயலலிதா உருவம் உள்ளது. அதை பார்த்து ஆளும் கட்சியினர் பயப்படுகிறார்கள். நாங்கள் இந்த கட்சியையும், கொடியையும் பயன்படுத்தக் கூடாது என்று அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தஞ்சையில் உண்ணாவிரதம் நடந்தது. தொடர்ந்து ஏப்ரல் மாதம் 3-ந்தேதி திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டோம். விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைய ஜாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அம்மா முதல்வராக இருந்தபோதும் இல்லாத போதும் மக்கள் விரும்பாத திட்டங்களை தடுத்து நிறுத்தினார். தனது இறுதி மூச்சு இருந்தவரை இயக்கத்துக்காக வாழ்ந்தார். தனக்கு பிறகும் இந்த இயக்கம் 100 ஆண்டு வாழும் என கூறினார்.

அம்மா இறந்ததும் சின்னம்மா நினைத்திருந்தால் முதல்வராகி இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் பதவிக்கு அப்பாற்பட்டு இருந்தார். அதேபோன்று ஜெயலலிதாவால் அரசியலுக்கு வந்தவன் நான். நான் நினைத்திருந்தால் முதல்வராகி இருக்க முடியும். ஆனால் நானும் அவ்வாறு செய்யவில்லை. நாங்கள் அவ்வாறு செய்யாமல் ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் முதல்வராக்கினோம். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் சுயரூபத்தை காட்டியதால் அவரை பதவியில் இருந்து விலக்கினோம். ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்த இடத்தில் இருந்த எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினோம். ஆனால் 2 பேரும் அதை மறந்து எங்களுக்கு துரோகம் செய்கிறார்கள்.

18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் நிச்சயம் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். அந்த தீர்ப்பு வந்ததும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். எங்களுக்கு துரோகம் செய்தவர்களை நாங்கள் விரட்டி அடிப்போம்.

காவல்துறையை எங்களுக்கு எதிராக ஆளும் கட்சியினர் ஏவுகின்றனர். ஆனால் வரலாறு மாறும். எந்த காவல்துறையை நீங்கள் ஏவி விடுகிறீர்களோ…. அந்த காவல்துறையே உங்களை கைது செய்யும் நிலை ஏற்படும்.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார்.

Leave a Reply