திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள பெட்டவாய்த்தலை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். கொத்தனார். இவருடைய மனைவி கவிதா (வயது 39). இந்த தம்பதிக்கு 2 மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராஜேந்திரன் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதேபோல் கடந்த 26-ந்தேதியும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் மனைவி கவிதாவை அடித்து கீழே தள்ளினார். இதில் நிலைகுலைந்த கவிதா சுவரில் மோதியபடி கீழே விழுந்தார். பின்னர் ராஜேந்திரன் அங்கிருந்து சென்றுவிட்டார்.

நேற்று மதியம் வரை விழுந்த இடத்திலேயே கவிதா கிடந்ததால் சந்தேகம் அடைந்த ராஜேந்திரன் மனைவியை தூக்கி பார்த்தார். அப்போது கவிதா இறந்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் காவேரியம்மாள், கவிதாவின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் ராஜேந்திரனை காவல்துறையினர் தேடினர். ஆனால் அதற்குள் அவர் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை தொடர்ந்து தேடிவருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை குற்றப்பிரிவு டி.எஸ்.பி. அண்ணாமலை சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் ராஜேந்திரனை உடனே பிடிக்கவும் உத்தரவிட்டார். குடிப்பழக்கத்தால் 4 பிள்ளைகளும் தாயை இழந்துள்ள தவித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply