shadow

ப்ளே ஸ்டோரில் போலி ஆப்ஸ்களை தவிர்ப்பது எப்படி? #PlayStoreBasics

நமது மொபைல் போனில் தவிர்க்கவே முடியாத விஷயங்களில் ஒன்று, ஆப்ஸ் எனப்படும் மொபைல் அப்ளிகேஷன்கள். செய்தி, கேம்ஸ், இசை, வீடியோ, இ-வாலட்கள் என ஒவ்வொன்றிற்கும் ஏதாவது ஒரு ஆப்பை டவுன்லோடு செய்து பயன்படுத்துவோம். அப்படி ஒவ்வொரு முறை குறிப்பிட்ட ஒரு ஆப்பை டவுன்லோடு செய்ய நினைக்கும் போது, நமக்கு தொல்லை தருவது போலி ஆப்ஸ்கள்.

இதற்கு உதாரணமாக மோடி சமீபத்தில் அறிமுகம் செய்த பீம் ஆப்பையே கூறலாம். நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உருவாக்கியதுதான் இந்த பீம் ஆப். ஆனால் நீங்கள் வெறும் BHIM என மட்டும் ப்ளே ஸ்டோரில் டைப் செய்தால், சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆப்ஸ்கள் வந்து கொட்டுகின்றன. எது இதில் உண்மையானது என சில நொடிகள் குழம்பி விடுவோம். தற்போது பீம் ஆப், பிரபலம் அடைந்து விட்டதால் தேடும்போது எளிதாக கிடைக்கிறது. ஆனால் அதிகம் பிரபலம் இல்லாத, அல்லது புதிய ஆப்களை டவுன்லோடு செய்யும் போது, நிச்சயம் குழம்பி விடுவோம்.

இந்த போலி ஆப்ஸ்கள் நமது நேரத்தையும், டேட்டாவையும் வீணாக்குவதோடு மட்டுமில்லாமல், நம் மொபைலின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. ஆனால சில சின்னச் சின்ன விஷயங்களை நீங்கள் கவனத்தில் வைத்துக் கொண்டால், போலி ஆப்ஸ்களை எளிதாக கண்டுபிடித்து விடலாம்.
புதிய ஆப் டவுன்லோடு செய்ய தேடும்போது, உங்களுக்கு எளிதாக கைகொடுப்பது அந்த ஆப் ஐகான்தான். உண்மையான லோகோவை, போலி ஆப்ஸ்கள் அனைத்துமே காப்பி செய்வதில்லை. எனவே லோகோ மூலம் உண்மையான ஆப்ஸ்களை கண்டுபிடிக்க முடியும்.

நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் App-ன் டெவலப்பர் பெயரை தெரிந்து வைத்திருங்கள். வங்கி சேவைகள், பணம் தொடர்பான ஆப்ஸ்களை டவுன்லோட் செய்யும் போது, அது அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் ஆப்தானா என்பதனை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். நிறுவனத்தின் பெயரில் இருக்கும் .com, Inc, .in போன்ற விஷயங்களைக் கூட கவனிக்க வேண்டும்.

ஒரே பெயரில் அதிகமான ஆப்கள் இருக்கும் போது, அவற்றில் எந்த ஆப் அதிகமாக இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது என்பதனையும் கருத்தில் கொள்ளுங்கள். ADDITIONAL INFORMATION பகுதிக்கு சென்றால், ஆப் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

கூகுளின் எடிட்டர் சாய்ஸ், டாப் டெவலப்பர் அங்கீகாரம் பெற்ற ஆப்களை தாராளமாக தரவிறக்கம் செய்யலாம். ஆனால் புதிதாக ஒரு ஆப் வரும்போது, இந்த விஷயங்களை எதிர்பார்க்க முடியாது.

ஒரு ஆப்பை, வேறு ஏதேனும் இணையதளங்களில் இருந்து APK-வாக டவுன்லோடு செய்வதை விட, ப்ளே ஸ்டோரில் டவுன்லோட் செய்வதே சிறந்தது. எனவே வேறு இணையதளங்களில் இருந்து ஆப்ஸ்களை தரவிறக்கம் செய்வதை தவிர்க்கலாம். அதேபோல குறிப்பிட்ட நிறுவனங்கள், தனியார் சேவைகள், கல்லூரி தேர்வு முடிவுகளை அறியும் ஆப்ஸ்களை, ப்ளே ஸ்டோரில் கண்டறிவது கடினம். அப்போது அந்த நிறுவனங்களின் இணையதளங்களுக்குச் சென்று, அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் கூகுள் ப்ளே ஸ்டோர் லிங்க்கை க்ளிக் செய்து டவுன்லோட் செய்யலாம்.

நீங்கள் அறிமுகம் இல்லாத ஆப்ஸ்களை டவுன்லோட் செய்யும்போது, ஆவற்றின் செயல்பாடுகள், குறைகள் பற்றியெல்லாம் கண்டறிவது கடினம். எனவே எளிதான வேலை, REVIEWS பகுதியில் இருக்கும் யூசர் ரெவ்யூக்கள் மற்றும் ரேட்டிங் ஆகியவற்றை பார்ப்பதுதான். இதன் மூலம், தேவையில்லாத ஆப்ஸ்களை டவுன்லோட் செய்து ஏமாற வேண்டியிருக்காது. அதேபோல அடுத்து கைகொடுப்பது அப்டேட் செய்யப்பட்ட தேதி. இதை வைத்தும் உண்மையான ஆப்ஸ்களை கண்டறியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *