shadow

அனைவருக்கும் வீடு- 2022: புறக்கணிக்கப்படுகிறது குடிசைப் பகுதி?
house
மத்திய அரசு இந்தியாவின் வீட்டுத் தேவையை நிறைவேற்றும் பொருட்டு ‘அனைவருக்கும் வீடு-2022’ திட்டத்தை அறிவித்தது. அதாவது சுதந்திர இந்தியாவின் பவளவிழாவுக்குள் இந்தியர் ஒவ்வொருக்கும் சொந்தமாக வீட்டை உருவாக்க வேண்டும் என்று அரசு உறுதிபூண்டது. ‘‘2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சொந்தமாக வீட்டை அமைத்துத் தருவதுதான் எங்கள் இலக்கு’’ என மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு இந்தத் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்ததையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

இந்தத் திட்டத்தின் தொடக்கமாக ஒன்பது மாநிலங்களில் 305 நகரங்களைக் கண்டறிந்து வீட்டுத் தேவைக்கான பணிகளைத் தொடங்கியிருக்கிறது அரசு. ஆனால் இந்தத் திட்டம், இந்தியாவின் குடிசைப் பகுதிகளில் வாழ்பவர்களுக்கும் வீடற்றவர்களுக்கும் வீட்டுத் தேவையை நிறைவேற்றுவதில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என ஐநா அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

இதற்காக இரு வாரச் சுற்றுப் பயணமாக இந்தியா வந்த ஐநாவின் சிறப்புப் பிரதிநிதி லென்னானி ஃபாகா தனது அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் குடிசைப் பகுதியில் வாழ்பவர்கள், பாகுபாடுகளுக்கு இடையில், பாதுகாப்பின்றி வாழ்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் வெளியேற்றப்படுவதற்கும் ஒதுக்கப்படுவதற்கும் உள்ளாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாகுபாடு, வெளியேற்றப்படுதல், ஒதுக்கப்படுதல் இவை எல்லாம் இந்தியாவின் வீட்டுத் தேவையை பூரணமாக்கும் இலக்கைச் சிக்கலாக்கக்கூடியவை எனவும் அந்த அறிக்கை அவர் சுட்டிக் காட்டுகிறார். “எந்த முன் அறிவிப்புமின்றி, பலவந்தமாக அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்” எனத் தன் நேரடிக் கள ஆய்வின் அனுபவங்களை அவர் பகிர்ந்துகொள்கிறார்.

2001-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 4.47 லட்சமாக இருந்த நகர்ப்புற வீடற்றவர்களின் எண்ணிக்கை, 2011-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 4.49 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் நகர்ப் புறப் பகுதிகளில் 2,20,741 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த மூன்று ஆண்டுகளில் வீட்டுத் தேவையும் உயர்ந்துள்ளது. இன்றைக்கு நகர்ப்புறப் பகுதிகளில் வீட்டுத் தேவை 1.87 கோடியாக உள்ளது. இந்தத் தேவையில் 95 சதவீதம் குறைந்த விலை வீடுகள்தான்.

ஐநாவின் இந்த அறிக்கை வீட்டுத் தேவை மட்டுமல்லாமல் கழிவுநீர், குடிநீர், மின்சாரம் ஆகிய வசதிகளைச் செய்துதர வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. இந்த வீட்டுத் தேவை நிறைவேற்றுவது சவாலான காரியம்தான். அதைச் செய்ய இரு வழித் திட்டம் தேவை என ஐநா பரிந்துரைக்கிறது. அதாவது ஏற்கனவே இருக்கும் வீட்டுத் தேவையை ஒரு வழியாகவும் வருங்காலத் தேவையை ஒரு வழியாகவும் நிறைவேற்றத் திட்டங்கள் வகுக்க வேண்டும்.

Leave a Reply