வாழ்வை நெறிப்படுத்தும் இந்து சமயம்

வாழ்வை நெறிப்படுத்தும் இந்து சமயம்

hinduஇந்து சமயத்திற்கு ‘சனாதன தர்மம்’ என்ற பெயரும் உண்டு. இதன் பொருள் ‘என்றுமுள்ள வாழ்க்கை நெறி’ என்பதாகும். அதாவது எந்த வழியில் அணுகினாலும் இறைவனை அடையலாம் என்பது இதன் அடிப்படையாகும்.

வாழ்வை நெறிப்படுத்தும் இந்து சமயம்
சிவபெருமான்
தற்போது விஞ்ஞானம் பெற்றுள்ள அபரிதமான, பிரமிக்க வைக்கும் வளர்ச்சி, உலகம் முழுவதும் எல்லா இனத்திலும் கலாச்சார, பண்பாடுகளில் மாபெரும் மாற்றங்களை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டை காப்பற்ற வேண்டிய பொறுப்பும், போற்றி, பேணி வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.

அதற்கு இந்து சமயத்தில் உள்ள வாழ்வியல் நெறிமுறைகளை கடைபிடிக்க வைக்க வேண்டியது மிக, மிக அவசியமாகும். இந்து சமய வாழ்க்கை என்பது அன்பு, அறிவு, ஆற்றல், செல்வம், ஒழுக்கம், ஒற்றுமை, செயல், தியாகம், நம்பிக்கை உள்பட பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது.

மேற்கண்ட அனைத்தும் ஒருங்கிணையும் போது அது ஒரு சிறந்த ஆளுமையை வளர்க்கும். இந்து சமயத்தின் இந்த ஒருங்கிணைந்த பயிற்சியைப் பெறும் போது மனிதன் வாழ்க்கையில் சலனம் இல்லாத மேம்பாட்டை எட்ட முடியும். பொதுவாக இறைவனை அடைவதற்கான இறை தரிசனத்தை கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம், ராஜயோகம் ஆகிய நான்கு வழிகள் மூலம் பெறலாம் என்று நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

ஆனால் உண்மையில் இறைவனை நெருங்குவதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. வேதங்கள், உபநிஷத்துகள் கற்றவனுக்கு இறைவன் அருள் கிடைக்காமல் போகலாம். வேதபாராயணம் பற்றி ஒரு வரி கூட தெரியாதவனுக்கு இறைவன் காட்சி கொடுக்கலாம். எனவே இறைவழிபாட்டில் வெளிவேஷங்கள் தேவை இல்லை. இயல்பான வழிபாடே போதுமானது. இதற்கு மேலும் உதவும் வகையில் 8 வகை குணங்களை இந்து சமயம் வரையறுத்துள்ளது.

1. உலகில் உள்ள எல்லா உயிர்களிடமும் அன்புடன் இருக்க வேண்டும். கருணையை கைவிடக்கூடாது. இதை வலியுறுத்தவே, ‘அன்பே சிவம், அதுவே நலம்’ என்றனர்.

2. பொறுமை மற்றும் எதையும் சகித்துக் கொள்ளும் மன உறுதி வேண்டும்.

3. மற்றவர்களை நினைத்து பொறாமைப்படக்கூடாது.

4. உடல், மனம், செயலில் எப்போதும் தூய்மையுடன் இருத்தல் வேண்டும்.

5. தன் முனைப்பின் காரணமாகவும், பேராசை காரணமாகவும் எழக்கூடிய வலி மிகுந்த உழைப்பு வேண்டும்.

6. எப்போதும் கலகலப்பாக இருக்க வேண்டும். இறுக்கமற்று இருக்க வேண்டும்.

7. எப்போதும் நல்ல நடத்தையுடன் இருக்க வேண்டும். தாராள மனதுடன் இருப்பது சிறந்தது.

8. எல்லா மோகங்களும் வலுவற்றவை, நிலையற்றவை என்பதை உணர வேண்டும்.

இந்த எட்டு வகை குணங்கள் மூலம் அறம், பொருள், இன்பம், வீடு அகிய நான்கையும் பெற முடியும். இவை இறைவனை எளிதில் காண உதவும்.

இந்து சமயத்தின் முக்கிய அம்சமே, அது வேதங்கள் உபநிஷத்துக்ள், தத்துவங்கள், ஆகமங்கள், புராணங்கள், தர்மங்கள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்ட ஆன்மிக அடிப்படையில் தங்கி இருப்பதுதான். அது மட்டுமின்றி எந்த நல்ல கருத்தையும் ஏற்றுக் கொள்வது இந்து சமயத்தின் தனித்துவமான சிறப்பாகும்.

இந்து சமயம் மனிதனுக்கும் அவனது கொள்கை, வாழ்க்கை முறை, வழிபாட்டு முறைகளுக்கு முழுமையான சுதந்திரத்தை கொடுத்துள்ளது. அதனால் தான் எத்தனையோ சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் இருந்தாலும் இந்துக்கள் தம் இறைவழிபாட்டை வாழ்வியலோடு, ஒருங்கிணைந்த ஒன்றாக, எளிமையானதாக வைத்துள்ளனர்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் ஒவ்வொன்றும் இந்து சமய இறைவழி பாட்டில் எதிரொலித்தப்படி உள்ளது. அதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.

ஆதி காலத்தில் காதல் புனிதமாக கருதப்பட்டது. அந்த புனிதம் தெய்வங்களின் லீலைகள் மூலம் உணர்த்தப்பட்டது.
கிருஷ்ண பரமாத்மா சத்தியபாமாவை காதலித்து கரம்பிடித்தார். முருகப்பெருமான் தினைப்புனத்தில் காவல் இருந்த வள்ளியை காதலித்து திருமணம் செய்தார்.

அது போல கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஊடல் ஏற்படுவதையும் இறைவழிபாட்டில் காணலாம். சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் சிவம் பெரிதா, சக்தி பெரிதா என்ற ஊடல் ஏற்படுகிறது. இறுதியில் சக்தி இல்லாமல் சிவன் இல்லை. சிவன் இல்லாமல் சக்தி இல்லை என்ற தத்துவம் உணர்த்தப்படுகிறது.

ஆண், பெண் இருவரில் யார் உயர்வு, யார் தாழ்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. இருவரும் சமம் என்பது ஆலய வழிபாட்டில் பல்வேறு வகைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆணும், பெண்ணும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. இந்து மத தெய்வக் கோட்பாட்டில் சிவலிங்கத்தின் தத்துவமே இதுதான்.

அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு தத்துவமும் இதனை உள்ளடக்கியதுதான். எந்த நிலையிலும் ஆண் – பெண் சரிநிகர் சமம் என்பதை இந்து மதம் காலம், காலமாக உணர்த்தியபடி உள்ளது. இந்த அடிப்படையில் தான் இந்து ஆலயங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் மையங்களாக உருவாக்கப்பட்டன.

ஆலயங்களில் நடத்தப்படும் திருவிழாக்கள் அனைத்தும் நமது சமுதாயத்தை ஒருங்கிணைப்பதற்காக நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட வையாகும். தேர் திருவிழா நடக்கும் போது தேரை ஏழை – பணக்காரர், தாழ்ந்த சாதி – உயர்ந்த சாதி என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாரும் வடம் பிடித்து இழுப்பார்கள்.

‘இறைவன் முன்பு நாம் அனைவரும் சமம்’ என்ற மிகப்பெரிய வாழ்வியல் நெறி அங்கு உணர்த்தப்படுகிறது. மேலும் வாழ்வில் எவ்வளவு துன்பம், துயரம், பிரச்சினைகள் வந்தாலும் அத்தனையையும் அடிபணிய வைப்பது ஆலய வழிபாடுதான்.
‘நான் கும்பிடும் கடவுள் என்னை வழிநடத்துவார்’ என்ற அசைக்க முடியாத இரும்பு நம்பிக்கையில் தான் இன்று 99 சதவீதம் பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்த தெய்வ நம்பிக்கையும் அசாத்திய துணிச்சலும்தான் மனதில் உள்ள பயத்தை எல்லாம் தவிடு பொடியாக்குகிறது. நம்பினார் கெடுவதில்லை. இது நான்குமுறை தீர்ப்பு.

புராணங்கள், இதிகாசங்கள், நாயன்மார், ஆழ்வார்களின் பாடல்களும் நம்மை நெறிப்படுத்தும் சக்தி படைத்தவை. இவை கடவுளிடம் நம்மை முழுமையாக ஒப்படைக்க செய்து விடும். கடவுளிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காத தன்மை உண்டாகும். இப்படி நமது வாழ்வியலின் ஒவ்வொரு செயலிலும் இந்து சமய கோட்பாடுகள் இரண்டற கலந்துள்ளது. அந்த கோட்பாடுகளை சரியாக கடைபிடிப்பவர்களே பிறவிச் சூழலில் இருந்து விடுபட முடியும்.

இந்து தர்மத்தால் மட்டுமே பிறப்பு – இறப்பு சூழலில் இருந்து நம்மை விடுவிக்க முடியும். அதற்கு ஒவ்வொருவரும் சில கடமைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

* தினமும் சூரியன் உதிப்பதற்கு முன்பு படுக்கையில் இருந்து எழ வேண்டும்.

* காலையில் நீராடி தூய ஆடை அணிந்ததும் தவறாமல் இறை வழிபாடு செய்ய வேண்டும்.

* காலை, மாலை இரு நேரமும் நெய் விளக்கேற்றி நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

* நேரம் இருப்பவர்கள் உரிய மந்திரங்கள் சொல்லி வழிபடுங்கள்.

* நெற்றியில் திருநீறு, குங்குமம் அணியாமல் இருக்கக் கூடாது.

* தினமும் புராண, இதிகாச, தேவார – திவ்ய பிரபந்தம் உள்ளிட்ட சமய நூல்களை படிக்க வேண்டும்.

* வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தினமும் தியானம் பழக வேண்டும்.

* ஆலயங்களில் நடத்தப்படும் பஜனை, சத்சங்கம், கதாகாலட்சேபம், சமய சொற்பொழிவுகளை சென்று கேட்க வேண்டும்.

* வீட்டில் நம் கண்ணுக்கு அடிக்கடி படும் இடத்தில் ‘ஓம்’ படத்தை மாட்டி வைக்கவும்.

* விரத நாட்கள், பண்டிகை தினங்களை பொழுதுபோக்கு நாட்களாகக் கருதாமல் ஐதீகத்தை உணர்ந்து ஆத்மார்த்தமாக கடைபிடிக்க வேண்டும்.

* மாதத்துக்கு ஒரு தடவையாவது வீட்டில் நாம சங்கீர்த்தனம் செய்வது அல்லது சிறப்பு வழிபாடுகள் நடத்தலாம்.

* மடாதிபதிகள், துறவிகள், ஞானிகளை சந்தித்து ஆசி பெற வேண்டும். துறவிகள் பார்வை நம் மீது பட்டால் தோஷங்கள் விலகும்.

* தினமும் ஆலயம் செல்ல வேண்டும். முடியாதவர்கள் வாரத்துக்கு ஒரு தடவையாவது ஆலயத்துக்கு சென்று, நிதானமாக, மனதை ஒருமுகப்படுத்தி இறைவழிபாடு செய்ய வேண்டும்.

* ஆலயத்துக்கு செல்லும்போது தனியாக செல்லாமல், மனைவி மற்றும் குழந்தைளை அழைத்து சென்று உரிய முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும்.

இவையெல்லாம் நம் வாழ்வை மேன்மைப்படுத்தும். இவை தவிர இன்னும் ஏராளமான இந்து தர்ம கோட்பாடுகள் உள்ளன. அவை மூலம் நாம் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டியதுள்ளது. ஞானச் சுரங்கமான நமது இந்து சமய பண்பாட்டில் அள்ள அள்ளக் குறையாத பலன் தரும் விஷயங்கள் ஏராளமாக உள்ளன. கடந்த 60 வாரங்களாக நாங்கள் கொடுத்திருப்பது ஒரு கைபிடி அளவுதான்.

தினமும் ஆலயத்துக்கு சென்றால் நாளடைவில், வழிபாட்டு ரகசியங்கள் உங்க ளுக்கு புரிந்து விடும். ஆலய வழிபாட்டில் உள்ள கேள்வி களுக்கு விடை கிடைக்கத் தொடங்கி விடும்.

அந்த விடைகள் உங்களை முழு மனிதனாக்கும். மனிதருள் மாணிக்கமாக நீங்கள் ஒளி வீசுவீர்கள். அந்த நிலையை பயன்படுத்தி பிறவிப் பெருங்கடலில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published.