தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் உணர்வுப்பூர்வமாக பின்பற்றும் எவருக்கும் வானம் வசப்பட்டே ஆக வேண்டும் என்ற இயற்கை விதியை தெள்ளத் தெளிவாக உணர்த்தும் ஓர் அசாதரணமான கதை. 1880ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் நாள்  அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள தஸ்கம்பியா எனும் சிற்றூரில் ஒரு குழந்தை பிறந்தது. அழகாகவும் நல்ல உடல் ஆரோக்கியமாகவும் இருந்த தங்கள் குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்று எல்லா பெற்றோரைப்போல் அந்த பெற்றோரும் நம்பினர், விரும்பினர். குழந்தைக்கு இரண்டு வயதுகூட நிரம்பாத தருணத்தில் திடிரென்று காய்ச்சல் வந்தது. அது என்ன காய்ச்சல் என்பது அப்போதைய மருத்துவர்களுக்கும் தெரியவில்லை குழந்தை இறந்துவிடும் என்றுதான் நினைத்து வருந்தினர். ஆனால் பெயர் தெரியாத அந்த நோய் குழந்தையின் உயிரை பறிக்கவில்லை மாறாக அந்த பச்சிளங்குழந்தையின் பசுமை மாறாத உடலில் இரண்டு கொடூரங்களை நிகழ்த்திக் காட்டியது. முதலாவதாக அந்த மழலையின் செவிகள் செயலிழந்தன. அடுத்து அந்த பிஞ்சுக் குழந்தையின் சின்னஞ்சிறு விழிகள் ஒளியிழந்தன. பேசிக்கூட பழகாத, தன் பெயரையே கேட்டறியாத அந்த பிஞ்சுப்பருவத்திலேயே கண் பார்வையையும், செவிகளையும் இழந்தது அந்த பச்சிளங்குழந்தை.

உங்கள் விழிகளை நனைக்கப்போகும் இந்தக் கதையின் நாயகியின் பெயர் ஹெலன் கெல்லர். இரண்டு வயது நிரம்பும் முன்னே இரண்டு முக்கிய புலன்களை இழந்த ஹெலன் கெல்லர் ஏழு வயதாகும் வரை இருண்ட உலகில் மருண்டு போயிருந்தார். பின்னர் ஹெலன் கெல்லருக்கு நிபுனத்துவ உதவி தேவை என்று நம்பிய பெற்றோர் வாஷிங்டென் சென்று அலெக்ஸாண்டர் கிரகாம்பெல்லை சந்தித்தனர். தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரகாம்பெல் காது கேளாதருக்கான நலனிலும் கல்வியிலும் அதிகம் ஈடுபாடு கொண்டவர். கிரகாம்பெல்  ஆன் சல்லிவன் என்ற ஆசிரியை ஹெலன் ஹெல்லருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த ஆன் சல்லிவன்தான் கும்மிருட்டான, நிசப்தமான ஹெலன் கெல்லர் உலகுக்கு ஒளியையும், ஒலியையும் கொண்டு சேர்த்தார்.

பார்க்கவும், கேட்கவும் முடியாத ஒரு சிறுமிக்கு எப்படி எழுத்துக்களையும், சொற்களையும் அறிமுகம் செய்வது? ஹெலன் ஹெல்லரின் உள்ளங்கையில் தன் விரல்களால் எழுதி கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகம் செய்தார் ஆன், அவற்றை விளையாட்டாக எண்ணி கற்றுக்கொண்டார் ஹெலன் கெல்லர். ஆனால் தான் கற்றுக்கொண்ட எழுத்துக்களை அவரால் பொருட்களோடு தொடர்புபடுத்த முடியவில்லை. உதாரணத்திற்கு வாட்டர் (வாடர்) என்று கைகளில் எழுதி காட்டும்போது ஹெலன் கெல்லருக்கு எழுத்துக்கள் புரியும் ஆனால் அது தண்ணீர் என்று தெரியாது. ஒருமுறை ஒரு தண்ணீர் குழாய்க்குக் கீழ் கெல்லரின் வலது கையில் தண்ணீர் படுமாறு வைத்து அவரது இடது கையில் வாட்டர் என்று எழுதி காட்டினார் ஆன் உடனே சட்டென்று மலர்ந்தது கெல்லரின் முகம். முதன் முதலாக ஒரு பொருளைத் தொட்டு அதன் பெயரை உணர்ந்தார். அதே குதூகலத்தில் தனது வலது கையை தரையில் வைத்தார் கெல்லர் அதனை எர்த் என்று இடது கையில் எழுதிக் காட்டினார் ஆன் ஒரு புதிய உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கினார் கெல்லர். சில நிமிடங்களிலேயே சுமார் முப்பது சொற்களைக் கற்றுக்கொண்டார்.

இப்படி ஒவ்வொரு பொருளையும் தொட்டு தொட்டு உணர்ந்தது அந்த எட்டு வயது பட்டாம்பூச்சி. பிறகு சிறிது சிறிதாக எழுத கற்றுக்கொண்ட கெல்லர் கண் பார்வையற்றோருக்கோன பிரெயில் எழுத்து முறையை கற்றுக் கொண்டார். எதையும் விரைவாக கற்றுக்கொள்ளும் திறமை கெல்லருக்கு இயல்பாகவே இருந்தது. பத்து வயது நிறைவதற்கு முன் லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன், மற்றும் கிரேக்க மொழிகளை பிரெயில் முறையில் கற்றுக்கொண்டார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!! பிறகு கெல்லருக்கு பேசக் கற்றுத்தர ஷேரபுலா என்ற ஆசிரியை உதவினார். எவர் பேசுவதையும்தான் கெல்லரால் பார்க்கவும் கேட்கவும் முடியாதே பிறகு எப்படி அவருக்கு சொல்லித்தருவது? நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ தனது ஆசிரியை ஷேரஃபுலா பேசும்போது அவரது வாய் உதடுகள் மற்றும் நாக்கின் அசைவுகளை தொட்டு தொட்டு உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக பேசக் கற்றுக்கொண்டார் ஹெலன் கெல்லர். நம்பமுடிகிறதா? கற்பனை செய்து பார்க்கக்கூட சிரமமாக இருக்கிறதல்லவா? தட்டுத் தடுமாறி பேசத் தொடங்கிய அவர் பல ஆண்டுகள் சிரமபட்டு பயிற்சி செய்தார். கடைசிவரை அவரால் தெளிவாக பேச முடியவில்லை ஆனால் ஒருமுறைகூட மனம் தளரவில்லை ஹெலன் கெல்லர்.

தனியாக பாடங்களை கற்றுக்கொண்ட கெல்லர் பல்கலைக் கழகத்திற்கு செல்ல விரும்பினார். ராட்கிளிஃப் பல்கலைக்கழகம் மிகுந்த தயக்கத்துடன் கெல்லரை சேர்த்துக்கொண்டது. ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904 ஆம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார். தனது கல்லூரி நாட்களிலேயே ‘தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார். பிரெயில் தட்டச்சு இயந்திரத்தையும் சாதரணமான தட்டச்சு இயந்திரத்தையும் பயன்படுத்த கற்றுக்கொண்டிருந்தார். கெல்லருக்கு குதிரைச் சவாரி தெரியும் இருவர் அமர்ந்து இயக்கும் டேண்டம் பைசைக்கிள் ஓட்டத் தெரியும். 1919 ஆம் ஆண்டு அவரது கெல்லரின் கதை ஹாலிவுட்டில் படமாக்கப்பட்டபோது அந்தப் படத்தில் நடித்தும் இருக்கிறார். இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் கண் பார்வையற்றோர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் அதிகாரப்பூர்வ பேச்சாளாராக கெல்லர் நியமிக்கப்பட்டார். குறிப்பாக உடல் ஊனமுற்றோருக்காக பேசிய கெல்லரைப் பல நாடுகள் பேச அழைத்தன.

    ஹெலன் கெல்லர் உதிர்த்த சில பொன்மொழிகள்:
பறக்க விரும்புபவனால் படர முடியாது.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

1930 ஆம் ஆண்டு தொடங்கி இந்தியா உட்பட 39 உலக நாடுகளுக்கு சென்று பேசினார் கெல்லர். பேசிய இடங்களிலெல்லாம் கண் பார்வையற்றோருக்காக நிதி சேர்த்தார். 1932 ஆம் ஆண்டு கெல்லருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது ஸ்காட்லாந்தின் லாஸ்கோ பல்கலைக்கழகம். இரண்டாம் உலகப்போரின்போது உடல் உறுப்புகளை இழந்த வீரர்களை சந்தித்து ஆறுதல் சொல்லி ஊக்கமூட்டினார். தன் வாழ்நாளில் 12 அமெரிக்க அதிபர்களை சந்தித்து பேசியிருக்கிறார் கெல்லர். 1964 ஆம் ஆண்டு தனிமனிதருக்கான அமெரிக்காவின் ஆக உயரிய விருதான அதிபரின் சுதந்திர பதக்கம் கெல்லருக்கு வழங்கப்பட்டது. தன்னம்பிக்கையின் மறு உருவாக விளங்கிய ஹெலன் கெல்லர் 1968 ஆம் ஆண்டு ஜூன் முதல் தேதி தனது 87 ஆவது வயதில் காலமானார். உறக்கத்திலேயே கெல்லரின் உயிர் அமைதியாக பிரிந்தது. அவர் பிரிந்து 43 ஆண்டுகள் கடந்து விட்டன என்றாலும் இன்றும் ஹெலன் கெல்லர் அறக்கட்டளை உடல் ஊனமுற்றோருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

ஒருமுறை கெல்லரிடம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் என்ன சாதித்தீர்கள் என்று கேட்கப்பட்டது அதற்கு கெல்லர்:“இந்த இருண்ட அமைதியான என் வாழ்வை கடவுள் ஏதோ ஒரு திட்டத்தோடுதான் படைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அதை என்றாவது ஒருநாள் நான் உணர்வேன். அப்போது நான் அதுகுறித்து மகிழ்வேன்”
என்று கூறினார். இன்று நீங்கள் சோர்ந்துபோயிருக்கிறீர்களா? ஏதோ ஒரு மனச்சுமை உங்கள் தோள்களில் பெரும்பாரமாக கனக்கிறதா? தீராத மன உளைச்சலில் இருக்கிறீர்களா? ‘ஹெலன் கெல்லர்’ என்ற இரண்டு மந்திர சொற்களை சொல்லிப்பாருங்கள்.

கண் பார்வையில்லாமலும், காது கேளாமாலும் கெல்லர் பட்ட சிரமங்களை விடவா உங்கள் பிரச்சினை பெரியது? சிந்தித்துப் பாருங்கள் இரண்டு முக்கிய புலன்கள் இல்லாமல் ஹெலன் கெல்லரால் இவ்வளவு சாதிக்க முடிந்ததென்றால் நமக்கு தடையாக இருப்பவை எவை? எந்த தடைகளையும் உடைத்தெரிய ஹெலன் கெல்லர் நம் காதுகளில் சொல்லும் உண்மை இரண்டு வார்த்தை மந்திரம் தன்னம்பிக்கை, விடாமுயற்சி. முயன்று பாருங்கள் உங்கள் இன்னல்கள் பஞ்சாய் பறக்காவிட்டாலும், ‘முயற்சி செய்யும் வரைதான் நாமெல்லாம் மனிதர்கள்’ என்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் கூற்று எவ்வளவு உண்மை என்பதை உணர்வீர்கள். நீங்கள் வசப்படுத்த விரும்பும் வானத்தில் மகிழ்ச்சியாக சிறகடித்துப் பறக்க வாழ்த்துக்கள்.

Leave a Reply