shadow

shadow

அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை நெருங்கிவிட்டதாக கூறப்படும் விஜய்க்கு இன்று 41வது பிறந்தநாள். இளையதளபதி என்று அவரது ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்ப்டும் விஜய், பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் மகன் என்பது அனைவரும் தெரிந்ததே. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வந்த விஜய், லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்ற விஜய், கடந்த 1995ஆம் ஆண்டில் லண்டனை சேர்ந்த தமிழ்ப் பெண் சங்கீதாவை திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு சஞ்சய், திவ்யா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய்க்கு ஆரம்ப காலத்தில் வெளியான படங்கள் வெற்றி பெறவில்லை என்பதால் அவரது தந்தை சந்திரசேகர், கேப்டன் விஜயகாந்துடன் இணைந்து நடிக்க வைத்த படமே ‘செந்தூரப்பாண்டி. இந்த படத்தின் வெற்றி அவருக்கு ரசிகர்கள் உருவாக காரணமாக இருந்தது.

விஜய் அவரது ரசிகர்களால் மட்டுமின்றி அனைவராலும் ரசிக்கத்தக்க வகையில் வெளிவந்த படம் ‘பூவே உனக்காக. இந்த படத்தில் அவரது வழக்கமான பாணியை கைவிட்டுவிட்டு, அமைதியான, அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்ததால் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதன்பின்னர் விஜய் நடித்து வெளியான பல காதல் படங்கள் சக்சஸ்தான்.

வரிசையாக ரொமான்ஸ் படங்களில் நடித்து வந்த விஜய் ஆக்சன் பாதைக்கு மாற காரணமாக இருந்த திரைப்படம் ‘திருமலை. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் அவர் பஞ்ச் டயலாக்குகளுடன் ஆக்சன் பாதைக்கு மாறினார். கில்லி, போக்கிரி, பகவதி, பத்ரி, வில்லு, முதல்  தற்போதைய துப்பாக்கி, கத்தி என இன்றுமுதல் அவர் ஆக்சன் பாதையில்தான் பயணம் செய்து வருகின்றார்.

விஜய் ஒரு நடிகராக மட்டுமின்றி பாடகராகவும் தன்னை அடையாளம் காட்டியுள்ளார். ரசிகன் படத்தில் முதன்முதலாக பாட ஆரம்பித்த விஜய் சமீபத்தில் வெளிவந்த ‘கத்தி’ படம் வரை பல பாடல்களை பாடியுள்ளார். விஜய் பாடிய பெரும்பாலான பாடல்கள் வெற்றி பெற்ற பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும், படுதோல்வி அடைந்தாலும் இரண்டையும் ஒரே மாதிரியாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் விஜய்யிடம் உண்டு. விஜய் கடந்த காலங்களில் பல சோதனைகளை சந்தித்துள்ளார். விஜய்யிடம் இருக்கும் ரசிகர் மன்ற செல்வாக்கு, மற்றும் மக்கள் செல்வாக்கை பார்த்து ஆட்சியாளர்கள் அலறிய காலங்களும் உண்டு. எனவே அவ்வப்போது இவருக்கு அரசியல் கட்சிகளிடம் இருந்து நெருக்குதல் வரும். ஆனால் அவற்றையும் பொறுமையாக கையாளும் திறன் உள்ளவர் விஜய். பாரத பிரதமர் நரேந்திர மோடி, கடந்த பாராளுமன்றத்தேர்தலின் போது தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்காக வந்தபோது ரஜினியை அடுத்து அவர் சந்திக்க விரும்பியது விஜய் ஒருவரைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் பெற்ற வெற்றிகள் அனைத்துமே அதிர்ஷ்டத்தால் வந்தது அல்ல. அவருடைய கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றிகள். இதுபோன்று இன்னும் பல வெற்றிகள் பெற்று, இந்திய அளவில் சூப்பர் ஸ்டார் இடத்தை அவர் விரைவில் பிடிப்பார் என்ற நம்பிக்கையுடன் அவருக்கு சென்னை டுடே நியூஸ் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Leave a Reply