அமீர்கான், காத்ரீனா கைப், அபிஷேக் பச்சன் ஆகியோர் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் வெளியான தூம் 3 படம் வசூலில் பெரும் சாதனை புரிந்துள்ளது. கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறையிலும், புத்தாண்டு விடுமுறையிலும், இதுவரை எந்த இந்திய படமும் செய்யாத வசூலை செய்துள்ளது. இந்த படத்தின் மொத்த வசூல் தற்போதைய நிலவரப்படி ரூ.250 கோடியை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.

புத்தாண்டு தினத்தில் மட்டும் தூம் 3 ரூ.10.75 கோடி வசூல் செய்ததாக விநியோகிஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். தூம் 3 படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியானது. இதில் இந்தி பதிப்பில் வெளியான தூம் 3யின் வசூல் மட்டும் ரூ.240.78 கோடி ஆகும். தமிழ், மற்றும் தெலுங்கில் சுமார் 12 கோடி வசூல் செய்துள்ளது.

அமெரிக்காவில் இந்த படம் 21.58 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது இந்திய மதிப்பில் சுமார் 133 கோடி ரூபாய் ஆகும். இதற்கு முன்னர் அமெரிக்காவில் 3 இடியட்ஸ், மை நேம் இஸ் கான் ஆகிய படங்கள்தான் அதிக வசூல் கொடுத்த படங்கள் ஆகும். அந்த சாதனைகளை தூம் 3 முறியடித்துள்ளது.

இந்த படம் சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஆதித்யா சோப்ரா என்பவர் தயாரிக்க, விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா என்ற இயக்குனர் இயக்கியிருந்தார்.

Leave a Reply