பலருக்கும் ஒரு சிறந்த முன் மாதிரியாக திகழ்ந்த நெல்சன் மண்டேலா உடல் நிலைக்குறைவு காரணமாக கடந்த 5 ஆம் தேதி ஜோகனஸ்பர்க் நகரில் மரணம் அடைந்தார். பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் 3 நாட்கள் தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள அரசு கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்தது. சுமார் 1,00,000 திற்கும் மேற்பட்ட மக்கள் வரிசையில் காத்திருந்து அந்த மாபெரும் தலைவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், ஈரான் துணை ஜனாதிபதி முஹம்மது ஷரியத்மதாரி உள்பட பல நாடுகளை சேர்ந்த ஏராளமான தலைவர்கள் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கல்லறை அருகே அவரது சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரத்தில் மண்டேலா இந்த பூமியில் வாழ்ந்த ஆண்டுகளை குறிப்பிடும் வகையில் 95 மெழுகுவர்த்திகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன.

மனைவி, உறவினர் மற்றும் அவர் மீது உயிரையே வைத்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கிடையே அந்த மாபெரும் தலைவரின் உடல் ஞாயிறு மாலை கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், உலகிலேயே அவருக்கான மிகப் பெரிய சிலை, பிரிட்டோரியாவில் திறந்து வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது.

வெண்கலத்திலான மண்டேலாவின் அந்த உருவச் சிலை, ஒன்பது மீட்டர்கள் உயரமும் நான்கரை டன் எடையும் கொண்டது. பிரிட்டோரியாவில் அரசு தலைமையகமான யூனியன் கட்டிடத்துக்கு எதிரேயுள்ள புல்வெளியில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டினை நெல்சன் மண்டேலா முன்னெடுத்து சென்றார் என்பதை குறிக்கும் வகையில் இரண்டு கைகளையும் நீட்டி விரித்த வண்னம் அவரது சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply