மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தஞ்சையில் நேற்று அளித்த பேட்டி: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் வருகையால் தமிழகத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது. காங்கிரஸ் கட்சி தான் எப்போதும் முதன்மையான அணி. இரண்டாவது, மூன்றாவது அணி பற்றியெல்லாம் தெரியாது.
கடந்த 65 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இந்திய மக்கள் 3 அல்லது 4 முறை தான் வாக்களித்துள்ளனர். அதிலும் பாஜக ஒரு முறைதான் ஆட்சிக்கு வந்தது. மக்களின் எண்ணங்கள், உணர்வுகளை காங்கிரஸ் ஆழமாக புரிந்து கொண்டுள்ளது. எங்கள் பணிக்கு மக்கள் உறுதியோடு வாக்களிப்பார்கள்.
இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவே இலங்கை வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடந்தது. இதன்மூலம், தமிழர் நலன் சார்ந்த நல்ல முடிவு ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிக்கு பிறகு தொடர்ந்து அமைதி திரும்ப வேண்டுமானால் அப்பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என்பதே வடக்கு மாகாணத்தின் முதல் கோரிக்கை என்று விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தகைய சூழலை இந்திய அரசு ஏற்படுத்தும். அவ்வாறு ஏற்படுத்தினால் அங்கு வாழும் தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். மீனவர் பிரச்னையில் முழுமையான தீர்வு ஏற்படுவதற்கு மத்திய அரசு தொடர் முயற்சியை மேற்கொண்டு வருகிறது என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.