shadow

அமெரிக்காவால் பழிவாங்கப்பட்ட ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலாளர் மரணம்.

UNஐக்கிய நாட்டு சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் புத்ரோஸ் காலி என்பவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 93. காலமான ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளருக்கு உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1992ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட புத்ரோஸ் காலி எகிப்து நாட்டை பூர்வீகமாக கொண்டவர். மேலும் ஆப்பிரிக்காவில் இருந்து ஐ.நா. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட முதல் நபர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. 5 ஆண்டுகள் இவர் பதவியில் இருந்த நிலையில் மீண்டும் ஐ.நா பொதுச்செயலாளராக இவர் விரும்பியதாகவும் ஆனால் அமெரிக்கா தனது அதிகாரத்தின் மூலம் இவரது ஆசையை தகர்த்துவிட்டது என்றும் கூறப்படுவதுண்டு.

எகிப்து நாட்டின் வெளியுறவு அமைச்சராக பணியாற்றிய அனுபவம் கொண்ட புத்ரோஸ் காலி, சோமாலியா, ருவாண்டா, மத்திய கிழக்கு ஆசியா, மற்றும் யுகோஸ்லாவியாவில் நெருக்கடி நிலவிய காலத்தில் மிகத்திறமையாக அந்த பிரச்சனைகளை கையாண்டார். ஆனாலு அமெரிக்காவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்ததால் அந்நாட்டின் எதிர்ப்புக்கு ஆளாகி மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை பெறும் வாய்ப்பை இழந்தார். இவரை அடுத்துதான் கோஃபி அன்னான் ஐ.நாவின் புதிய பொதுச்செயலாளராக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய மறைவிற்கு ஐ.நா.வின் தற்போதைய பொதுச் செயலாளர் பான் கி மூன், பிரான்ஸ் அதிபர் ஹோலாந்தே உட்பட உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply