shadow

Beef-burgers-350x250

தொன்மையான கலாசாரமும், பண்பாடும் கொண்ட இந்தியாவில், அன்னிய மற்றும் மேற்கத்திய நாடுகளின் கலாசாரம் வேரூன்ற தொடங்கி ஆண்டுகள் பல கடந்து விட்டன.

சுதந்திர இந்தியாவில் அடுத்தடுத்து அமைந்த அரசுகள் கடைப்பிடித்து வரும் பொருளாதார கொள்கைகளால் இந்திய மண்ணில் வெளிநாட்டு கலாசாரம் தழைத்தோங்குவது தவிர்க்க முடியாததாகி விட்டது.

மதம், மொழி, கலை, இசை, கட்டுமானம் என பல்வேறு துறைகளில் புகுந்த அன்னிய கலாசாரங்கள், மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான உணவிலும் புகுந்து விட்டது.

இந்தியா முழுவதும் பரவலாக முளைத்துள்ள வெளிநாட்டு உணவகங்களின் அசுர வளர்ச்சியே இதை உறுதிப்படுத்துகிறது.

இதனால், துரித உணவகங்கள் என்ற பெயரில் விதம், விதமாக உணவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களை கவர்ந்தன.

அத்தகைய வெளிநாட்டு உணவுகளில் ஒன்றுதான் நூடுல்ஸ் வகை. விரைவாக தயாராகும் ‘உடனடி உணவு’ வகைகளில் ஒன்றான இந்த நூடுல்ஸ், ஜப்பானின் கண்டுபிடிப்பு.

2–ம் உலகப்போரில் மிகப்பெரும் அழிவை சந்தித்த ஜப்பானில் கடும் உணவு பற்றாக்குறை நிலவியது. அந்த சமயத்தில் அன்னிய நாட்டு ரொட்டிக்கு பதிலாக, தங்கள் நாட்டு பாரம்பரியத்தை சார்ந்த உணவான நூடுல்சை மோமோபுகு அண்டோ என்பவர் கண்டுபிடித்தார்.

20–ம் நூற்றாண்டில் ஜப்பானின் சிறந்த கண்டுபிடிப்பு என பெயர் பெற்ற இந்த நூடுல்சுக்கு உலகம் முழுவதும் சிறந்த வரவேற்பு உண்டு.

சுவையாகவும், எளிதில் கெடாமலும், விரைவில் தயாரிக்கக்கூடியதுமாக இருந்த இந்த நூடுல்சை, கடந்த 1980–ம் ஆண்டுகளில் நெஸ்லே நிறுவனம் ‘மேகி நூடுல்ஸ்’ என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

‘2 நிமிடங்களில் தயாரிக்கலாம்’ என்ற குறிப்புடன் அறிமுகப்படுத்தப்பட்ட மேகி நூடுல்சுக்கு இந்தியாவில் பலத்த வரவேற்பு. குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் விருப்ப உணவு பட்டியலில் வெகு சீக்கிரமே இடம் பிடித்ததால், நாடு முழுவதும் பெரும்பாலான சமையலறைகளை மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் ஆக்கிரமித்தன.

அதற்கேற்ப நெஸ்லே நிறுவனமும் குழந்தைகளை கவரும் வகையில் பல்வேறு கவர்ச்சி விளம்பரங்கள் மூலமும், சினிமா பிரபலங்கள் மூலமும் மேகியை சந்தைப்படுத்தியது. இதனால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சமையலில் கோலோச்சி வந்தது மேகி.

இந்தியாவின் பாரம்பரிய உணவு வகைகளை பின்னுக்கு தள்ளி, வீறுநடை போட்டு வந்த மேகிக்கு சமீபத்தில் விழுந்தது பலத்த அடி.

குழந்தைகளின் விருப்ப உணவாகி இருந்த மேகி நூடுல்சில், நச்சுத்தன்மை மிகுந்த காரீயம் மற்றும் மோனோ சோடியம் குளூட்டாமேட் (எம்.எஸ்.ஜி.) போன்ற ரசாயன பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக கலந்திருப்பதை உத்தரபிரதேச உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

உடனே விழித்துக்கொண்ட பிற மாநில அதிகாரிகளும் மேகி நூடுல்சை பரிசோதித்தனர். அப்போது, மேகி நூடுல்சில் கலந்திருக்கும் நச்சுத்தன்மை பெருவாரியான ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மேகி நூடுல்சுக்கு நாடு முழுவதும் மத்திய அரசு தடை விதித்தது. அது மட்டுமின்றி நெஸ்லே நிறுவனம் மீதும், மேகி நூடுல்ஸ் தொடர்பான விளம்பரங்களில் நடித்த திரை பிரபலங்கள் மீதும் ஆங்காங்கே வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த குற்றச்சாட்டுகளை நெஸ்லே நிறுவனம் மறுத்தாலும், அரசு மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக நாடு முழுவதும் சந்தைகளில் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்த மேகி பாக்கெட்டுகளை திரும்ப பெற்று அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் மூலம் கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் மேகி ஏற்படுத்திய பரபரப்பு ஓரளவு அடங்கி வருகிறது. ஆனால் மேகியில் கலந்திருப்பதாக கூறப்பட்ட காரீயத்தின் நச்சு அவ்வளவு எளிதில் அடங்காது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் ஏராளமான துரித உணவுகளுக்கும் இதே நிலைதான்.

அது குறித்த ஒரு சிறிய அலசல் இதோ…..

ஆர்சனிக், பாதரசம் போன்ற கடின உலோகங்களின் வரிசையை சேர்ந்தது இந்த காரீயம். பெரும் நச்சுத்தன்மை கொண்ட இந்த உலோகத்தின் மாசுகள் நமது உடலில் ஒருமுறை சென்று விட்டால், அதை வெளியேற்றவோ, வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்தவோ நமது உடலால் முடியாது. எனவே நமது உடலில் இந்த மாசு சென்று விட்டால், அது மிகப்பெரும் உபாதைகளுக்கான தொடக்கம் தான்.

உணவின் மூலமாக உடலில் செல்லும் காரீயம் முதலில் மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும். இதனால் கோமா, வலிப்பு நோய் ஏற்பட்டு இறுதியில் சாவை விளைவிக்கும்.

அது மட்டுமின்றி சிறுநீரகம் மற்றும் இனப்பெருக்க மண்டல பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை போன்ற நோய்களையும் தோற்றுவிக்கும் வல்லமை வாய்ந்தது, இந்த காரீயம். மொத்தத்தில் இது ஒரு மெல்லக்கொல்லும் விஷம் ஆகும்.

ஆனால் இந்த காரீய மாசுவை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய் தொற்று நீக்கி சுத்தப்படுத்தப்பட்ட உணவில் கூட, காரீய நச்சின் பாதிப்பு இருக்குமாம். இது வயிற்றுப்போக்கில் இருந்து புற்றுநோய் வரையிலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாம்.

இதைப்போல ஒருவர் காரீய நச்சினால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா? என்பதை கண்டறிவதும் மிகவும் கடினம். நல்ல உடல் நலத்துடனும், சிறந்த ஆரோக்கியத்துடனும் இருக்கும் ஒருவர் கூட, காரீய நச்சால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்க முடியும் என்பது மருத்துவர்களின் கருத்து.

இப்படிப்பட்ட காரீய நச்சு காரணமாக இந்தியாவில் ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கு, ஒரு குழந்தை இறக்கிறது. பெரியவர்களை பொறுத்தவரையில், உலக அளவில் ஆண்டுதோறும் 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் இந்த காரீய நச்சு காரணமாக உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

பெரியவர்கள் மட்டுமின்றி கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் இந்த நச்சு பெரும் ஆபத்தாக விளங்குகிறது. தாயின் கருவில் இருக்கும் போது காரீய நச்சால் பாதிக்கப்படும் குழந்தைகள், பிறக்கும்போதே ஊனத்துடனும், நடத்தை குறைபாடுகள் மற்றும் மனரீதியான பிரச்சினைகளுடனும் பிறக்கும் அபாயம் உள்ளது.

இந்தியாவைப்போன்ற வளரும் நாடுகளுக்கு இது மிகப்பெரும் சவாலாக விளங்குவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இது, இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலமும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மனரீதியான குறைபாடுகள், மூளை சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 5 நோயாளிகளையாவது வாரம் ஒன்றுக்கு தங்கள் மருத்துவமனையில் பார்க்க முடியும் என இந்திய டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை மேற்கொள்வோரில் 80 சதவீதத்தினர், இத்தகைய காரீய நச்சு காரணமாகவே பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இந்த காரீயம் வெறும் நூடுல்சில் மட்டுமல்ல, நாம் அன்றாடம் பயன்படுத்தும் குடிநீரில் தொடங்கி, பால், சாக்லேட், மீன் போன்ற அனைத்து பொருட்களிலும், பலவகையான துரித உணவுகளிலும் கலந்துள்ளதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

காலாவதியான குடிநீர் இணைப்புகள், அசுத்தமான குடிநீர் குழாய்கள் போன்றவற்றால், குடிநீரில் காரீய நஞ்சு கலந்து விடுகிறது. நாம் உபயோகிக்கும் தண்ணீரே சுத்தமாக இல்லை என்றால், அதன் மூலம் தயாராகும் பிற உணவுப்பொருட்களிலும் இந்த மாசுகள் கலப்பதை தடுக்க இயலாது.

மேகி நூடுல்சில் கூட காரீயம் சேர்வதற்கு 2 காரணங்களே இருக்க முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஒன்று… மேகியை தயாரிக்கும் தொழிற்சாலைகளின் குடிநீர் குழாய்களில் இருந்து வந்திருக்கலாம், அல்லது பெயிண்ட் மூலம் கலந்திருக்கலாம் என்பதே நிபுணர்களின் கருத்து.

மாறாக மேகி தயாரிக்கப்படும் கோதுமையில் இருந்து ஒருபோதும் காரீயம் சேர வாய்ப்பு இல்லை என அவர்கள் அடித்து கூறுகின்றனர்.

எனவே சாதாரண கடைகளிலும், சந்தைகளிலும் இந்த பொருட்களை சோதனை செய்வதை விட, அந்தந்த பொருட்கள் தயாரிக்கப்படும் நிறுவனங்களிலேயே நேரில் சென்று ஆய்வு நடத்துமாறு அவர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களின் நிலைதான் இப்படி என்றால், உதிரியாக விற்பனை செய்யப்படும் பொருட்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது.

இந்திய மக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்களில், 75 சதவீதத்துக்கும் அதிகமான உணவு பொருட்களை உதிரியாகவே வாங்கி பயன்படுத்துகின்றனர்.

அதுவும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்ட பெரும்பாலானோர் இத்தகைய உதிரி பொருட்களை சார்ந்தே வாழ்க்கை நடத்துகின்றனர்.

ஆனால் இந்த உணவு பொருட்கள் மூலம் தங்கள் உடல்நிலை எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதை இந்த மக்கள் அறிய முடிவதில்லை. இப்படிப்பட்ட உணவுகள் தங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கிறது என்பதை அவர்கள் தெரிந்துகொண்டாலும், அதற்காக இவர்கள் போராடுவதும் இல்லை.

தங்கள் பாத்திரத்தில் எது போடப்படுகிறதோ? அதை சாப்பிட்டு எழுந்து செல்கின்றனரே தவிர, இதற்காக அவர்கள் கோர்ட்டுக்கு போவதில்லை.

இந்தியாவின் உணவு பாதுகாப்பு சட்டங்களை பொறுத்தவரை, நாம் வளரும் நாடுகளுக்கான உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றி வருகிறோம். எனினும் இது தொடர்பாக முறையான சட்ட திட்டங்கள் தற்போதும் நமது அரசியலமைப்பில் உள்ளன.

ஆனால் ஊழல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இருக்கும்வரை, இந்த சட்டங்களை அமல்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. எனவே இந்த சட்டங்களை மேலும் கடுமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே அதற்கான நல்ல தருணம் என தன்னார்வ அமைப்புகள் கூறுகின்றன.

தற்போதைய நிலையில் மோசடி நிறுவனங்கள் மீது பொதுநல வழக்கு தொடர்ந்தால், அந்த கம்பெனிகளுக்கு எதிராக தீர்ப்பை பெறுவது மிகவும் கடினம் என்பதே நிதர்சனம். கடந்த 2 ஆண்டுகளில் இதுபோன்று தொடரப்பட்ட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில், வெற்றி என்பது பெரும்பாலும் எட்டாக்கனியாகவே இருக்கிறது.

எனவே பாமர மக்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மைக்காக, சந்தைகளில் விற்பனைக்கு குவிந்துள்ள உணவு பொருட்களை அதிகாரிகள் தகுந்த முறையில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியம். இந்த பொருட்களை அந்தந்த நிறுவனங்களின் ஆய்வுக்கூடங்களை விட்டு, வெளி ஆய்வகங்களிலும் ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும்.

இதைப்போல தரம் குறைந்த பொருட்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்துக்கு உட்படுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் அதிகாரிகளும், அரசும் வெளிப்படையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும்.

மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை சந்தைகளில் இருந்து நெஸ்லே நிறுவனம் திரும்ப பெற்று வருவதால், இந்த பிரச்சினை முடிந்து விட்டதாக நாம் நினைக்கக்கூடாது. மிகப்பெரும் ஒரு விழிப்புணர்வு நடவடிக்கையின் தொடக்கமாக இது இருக்க வேண்டும்.

இந்தியாவில் மேகியை தடை செய்ததும், அதன் தொடர்ச்சியாக உணவு பாதுகாப்பு தொடர்பாக எழுந்துள்ள விழிப்புணர்வு நடவடிக்கைகளும் வரவேற்கத்தக்கது. சரியான இலக்கை நோக்கி தொடங்கியுள்ள அந்த பயணத்தை, இடையில் நிறுத்தி விடாமல் தொடர்ந்து நடைபோட செய்வதே சாலச்சிறந்தது.

நூடுல்ஸ் போன்ற உணவு பொருட்கள், குழந்தைகளையே முதன்மை வாடிக்கையாளர்களாக கொண்டு தயாரிக்கப்படுகின்றன. நச்சுத்தன்மை நிறைந்த இந்த உணவு பொருட்களை தொடர்ந்து உண்பதால், குழந்தைகளின் உடல் நலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தியாவின் வளமான எதிர்காலத்தின் அடிப்படையாக கருதப்படும் இந்த குழந்தைகளை நலமுடனும், வளமுடனும் வளர்த்தெடுக்க வேண்டியது நமது கடமை.

எனவே இந்த பொருட்களை விளம்பரப்படுத்தும் பிரபலங்களும் அவற்றை மனதில் கொள்ள வேண்டும். தாங்கள் விளம்பர தூதராக செயல்படும் பொருட்களின் தரம் குறித்த குறைந்தபட்ச உத்தரவாதத்தையாவது இவர்கள் அறிந்திருப்பது சிறந்தது.

இறுதியாக…

சந்தையில் விற்கும் எந்த உணவு பொருளானாலும், அவற்றின் விளம்பர கவர்ச்சியை பார்த்தோ, சுவையை பார்த்தோ வாங்கி செல்லாமல், அவற்றின் தரத்தை உய்த்துணர்ந்து பயன்படுத்துவதே பொதுமக்களாகிய நமது கடமை. நச்சுக்கு எதிரான விழிப்புணர்வே உடல் நலத்துக்கான திறவுகோல்.

நூடுல்சை அழிப்பதற்கு ரூ.20 கோடி

நாடு முழுவதிலும் இருந்து திரும்ப பெற்று வரும் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை, எரித்து அழிக்கும் பணியை நெஸ்லே நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சுமார் ரூ.320 கோடி மதிப்பிலான மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை அழிக்கும் பணிகள் நடந்து வருவதாக கடந்த மாதம் இந்த நிறுவனம் அறிவித்தது.

இந்த நூடுல்ஸ் பாக்கெட்டுகளை அழிப்பதற்கு சிமெண்டு உலைகளை நெஸ்லே நிறுவனம் தேர்ந்தெடுத்து உள்ளது. சிமெண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை உருவாக்கும் உலைகளில் எரிபொருளாக இவை பயன்படுத்தப்படுகிறது.

இதற்காக மராட்டிய மாநிலம் சந்திராபூரில் அமைந்துள்ள அம்புஜா சிமெண்டு உலை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நூடுல்ஸ் பாக்கெட்டுகளை அழிக்கும் பணிகளுக்காக அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.20 கோடி பணத்தை நெஸ்லே நிறுவனம் வழங்கி இருக்கிறது.

Leave a Reply