வேலை தேடும் இளைஞர்களிடம் நூதன மோசடி: இனிக்க இனிக்க பேசிய ஆடியோ

fake_call

நாளுக்கு நாள் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்து வருவது மனித இனத்திற்கே ஒரு வரப்பிரசாதமாக இருந்துவரும் நிலையில், அதே விஞ்ஞானம் மூலம் பல முறைகேடுகளும் நடப்பது குறித்த செய்திகளை அவ்வப்போது நாம் பார்த்து வருகிறோம். குறிப்பாக வங்கிகளில் இருந்து பேசுவதாக கூறி பலர் மோசடிகளை ஈடுபடுகின்றனர் என்பதும், ஓடிடி எண்களை ஏமாற்றி கேட்டு ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் ஏமாற்றும் கும்பல் இன்றும் நடமாடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வேலை தேடும் இளைஞர்களிடம் வேலைக்கு உங்களை சேர்த்துக் கொள்வதாக கூறி மோசடியாக பணம் பறிக்கும் கும்பலும் ஒருபக்கம் நடமாடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் சென்னையை சேர்ந்த வேலை தேடும் இளம்பெண் ஒருவரிடம் மோசடியாக ரூபாய் 15 ஆயிரத்து 500 ரூபாய் மோசடி செய்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

ஒரு முன்னணி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், வேலையில் சேர்வதற்கு முன்பணமாக 3,000 ரூபாயை அனுப்ப வேண்டும் என்றும் செல்போன் மூலம் மோசடி மர்ம நபர் ஒருவர் இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். அந்த இளம்பெண் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க போகிறது என்ற எண்ணத்தில் 3000 ரூபாய் அனுப்பி உள்ளார்.

அதன் பிறகு மீண்டும் தொடர்பு கொண்டஅந்த மர்ம நபர் உங்கள் வங்கி கணக்கில் மொத்தம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை கேட்டுள்ளார். அப்போதாவது அந்த இளம்பெண் சுதாரித்து இருந்தால் 3000 ரூபாயோடு போயிருக்கும். ஆனால் அந்த பெண் வெள்ளேந்தியாக தனது அக்கவுண்டில் 13 ஆயிரத்து 500 ரூபாய் இருப்பதாக கூற உடனே நீங்கள் அனுப்பிய மூவாயிரம் ரூபாயை திருப்பி அனுப்ப வேண்டுமானால் ரூ.7000 அனுப்பவேண்டும் என்றும் எங்கள் நிறுவனத்தில் இருந்து குறைந்தபட்சம் ரூ.10000 தான் அனுப்ப முடியும் என்றும் கூறியுள்ளார்.

எனவே அந்த இளம்பெண் தன் கொடுத்த மூவாயிரம் ரூபாயை திரும்ப பெற வேண்டும் என்பதற்காக மீண்டும் ரூ.7000 திரும்ப அனுப்பி உள்ளார். அதன் பிறகு அதே நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொள்வதாக மற்றொரு பெண் போன் செய்துள்ளார். தற்போது அந்த பெண்ணின் அக்கவுண்டில் ரூ.6000 இருப்பதை தெரிந்து கொண்ட அந்த மர்ம பெண் டாக்யூமன்ட் வெரிஃபிகேஷன் செய்வதற்காக 5,500 ரூபாய் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த பணத்தை அனுப்பினால் மொத்த பணத்தையும் திருப்பி அனுப்பிவிடுவோம் என்றும் அந்த மர்ம பெண் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தன்னுடைய ரூ.10,000 வருமோ என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் மறுபக்கம் பேசிய மர்ம பெண் இனிக்க இனிக்க பேசி மொத்த பணத்தையும் திருப்பி கொடுத்து விடுவோம், இது டாக்யூமன்ட் வெரிஃபிகேஷனுக்காக என்று கூறி ரூ.5500ஐயும் பெற்றுக் கொண்டார். அதன் பிறகு அந்த மர்ம நபர்களிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ஒரு நிறுவனம் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது ஒரு ரூபாய் கூட விண்ணப்பதாரர்களிடம் இருந்து வாங்குவது கிடையாது. அப்படி ஏதாவது நிறுவனம் பணம் கேட்டால் கண்ணை மூடிகொண்டு அந்நிறுவனம் மோசடி நிறுவனம் என்பதை வேலை தேடும் இளைஞர்கள் புரிந்துகொள்ளவேண்டும். வேலை கொடுக்கும் எந்த நிறுவனமும் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்களிடம் பணம் வாங்காது என்ற அடிப்படை உண்மையை புரிந்து கொண்டாலே இதுபோன்ற மோசடிகள் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில் அவர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. 9891169013, 9210687263 ஆகிய இரண்டு எண்களிடம் இருந்து பேசிய அந்த மர்ம நபர்களின் எண்கள் இப்போதும் இயங்கி கொண்டு தான் இருக்கின்றது, சென்னை இளம்பெண்ணை போல் இன்னும் பலர் ஏமாறவும் வாய்ப்பு உள்ளது. எனவே மேலும் சிலர் ஏமாறுவதற்குள் காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.