shadow

11

நகரத்து இளைஞர்களையும் இணையத்தையும் பிரிப்பது கடினம் என்று சொல்லும் அளவுக்கு வெப் அவர்களது நேரத்தை விழுங்குகிறது. பலவிதத் தகவல்களையும் அவர்கள் இணையத்திலிருந்தும் சமூக வலைதளங்களிலிருந்தும் பெற்றுக்கொள்கிறார்கள்.

என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பதிலிருந்து இன்று மனசே சரியில்ல என்று தங்கள் மன உணர்வை வெளிப்படுத்துவது வரை எல்லாவற்றையும் உடனுக்குடன் ஃபேஸ்புக் டிவிட்டர் போன்றவற்றில் பதிவிடுகிறார்கள். இதனால் நன்மைகள் இருக்குமளவுக்கு ஒருசில தீமைகளும் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஃபேஸ்புக்கில் நேரம் செலவிடுவதற்கும் நமது தோற்றப் பொலிவுக்கும் தொடர்பு இருக்கிறதாம். எப்போதும் ஃபேஸ்புக்கில் ஸ்க்ரோல் செய்தபடி இருப்பவர்கள் மனத்தில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகின்றனவாம். தொடர்ந்து ஃபேஸ்புக்கில் உலவிக்கொண்டே இருப்பவர்கள் தங்களது தோற்றத்தை மற்றவர்களுடன் அதிகமாக ஒப்பிடுகிறார்களாம். இப்படியெல்லாம் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வை 881 பெண்களிடம் நடத்தியிருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள், உடற்பயிற்சி மேற்கொள்கிறார்களா, அவர்கள் உருவம் பற்றிய கேள்விகள் என்ற ரீதியில் இந்த ஆய்வை நடத்திமுடித்திருக்கிறார்கள்.

கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள் நேரம் தவறி உண்பதற்கும் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவதற்கும் நேரிடையான தொடர்பு இல்லை. ஆனால் அதிக நேரம் இத்தகைய வலைதளங்களிலேயே மூழ்கிக் கிடப்பவர்களின் உருவத்தில் அதாவது தோற்றத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடுகிறது என்று பெட்யா எக்ளர் தெரிவிக்கிறார். இவர் ஸ்காட்லாந்தில் உள்ள க்ளாஸ்கோவ் என்னுமிடத்தில் உள்ள ஸ்ட்ரேத்க்ளைட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்.

எப்போதும் ஃபேஸ்புக்கில்

இருக்கும் பெண்கள் பிறர் தங்களது ஃபோட்டோவை ஷேர் பண்ணுவதைப் பார்க்கும்போது அந்த உருவத்துடன் தங்களது உருவத்தை ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்கிறார்கள், இதனால் அவர்கள் மனத்தில் அதிகமான எதிர்மறை எண்ணங்கள் உருவாகின்றன என்கிறார் ஒஹியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யூசுப் கல்யாங்கோ.

இதில் வேடிக்கை என்னவென்றால் உடம்பு மெலிய வேண்டும் என நினைக்கும் பெண்கள் அதிகம் ஃபேஸ்புக்கில் நேரத்தைப் போக்குகிறார்களாம்.

இப்படி அதிக நேரத்தைச் சமூக வலைதளத்தில் போக்குவதாலேயே இவர்களின் தோற்றப் பொலிவு மங்கிவிடுகிறது. தோற்றம் சரியாக இல்லை என்று எண்ணி இவர்கள் மன வருத்தம் அடைகிறார்கள். இதனால் உணவு உண்பதில் இவர்கள் கவனம் பதிவதில்லை. அது அவர்களது மனநிலையிலும் உடம்பிலும் ஆரோக்கியக் குறைவை உருவாக்குகிறது என்கிறது அந்த ஆய்வு.

ஆகவே பெண்களின் தோற்றத்தைப் பாழ்படுத்துதில் சமூக வலைதளங்கள் அதிகப் பங்காற்றுகின்றன என்கிறது அது. ஆய்வின் அறிக்கையை வாஷிங்டன்னில் உள்ள சியாட்டலில் நடைபெறயிருக்கும் 64-ம் சர்வதேச தகவல்தொடர்பு கூட்டமைப்பின் கருத்தரங்கில் வழங்க உள்ளார்களாம்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சும்மாவா சொல்லியிருப்பார்கள்?

Leave a Reply