ஃபேஸ்புக் ‘ஃப்ரீ பேசிக்ஸ்’ நல்லதா, கெட்டதா?

ஃபேஸ்புக் ‘ஃப்ரீ பேசிக்ஸ்’ நல்லதா, கெட்டதா?
facebook
முக்கிய நாளிதழ்கள் பலவற்றில் இரண்டு பக்கம் அளவுக்கு முழுப் பக்க விளம்பரங்கள் வருவதைப் பார்த்திருப்பீர்கள். ஃபேஸ்புக்குக்கு சொந்தமான ஃப்ரீ பேசிக்ஸ் என்னும் இணைய சேவைக்கு ஆதரவாக செய்யப்படும் விளம்பரங்கள்தான் அவை. நாளிதழ்களில் ஒருபக்க விளம்பரத்துக்கு பல லட்ச ரூபாய் செலவு செய்யவேண்டி இருக்கும்போது, எப்படி ஃபேஸ்புக் நிறுவனத்தினால் இப்படி விளம்பரம் தர முடிகிறது? அப்படி ஃப்ரீ பேசிக்ஸுக்கு விளம்பரம் தரவேண்டியதன் அவசியம்தான் என்ன? இந்த ஃப்ரீ பேசிக்ஸ் சேவைக்கு பலமான எதிர்ப்பு கிளம்பி இருப்பதாக சொல்கிறார்களே, ஏன்?

இந்தக் கேள்விகளுக்கு  பதில் தெரிந்துகொள்ளும் முன் ஃப்ரீ பேசி்க்ஸ் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

ஃப்ரீ பேசிக்ஸ்!

ஃப்ரீ பேசிக்ஸ் என்பது ஒரு ஆப். இந்த ஆப்பை ஒருவர் தனது மொபைலில் தரவிறக்கம் செய்து கொள்வதன் மூலம், ஃபேஸ்புக்கில் உள்ள சில வசதிகளையும், இணையத்தில் புத்தகங்கள், உடல் ஆரோக்கியம் சார்ந்த தகவல்கள், கல்வி சார்ந்த விஷயங்கள், வானிலை விவரங்கள் போன்ற சில அடிப்படை சேவைகளையும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தவிர, நீங்கள் பயன்படுத்தும் பிற சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும். இதுதான் இந்த ஃப்ரீ பேசிக்ஸ் சேவையின் அடிப்படை.

இந்தச் சேவையை இந்தியாவில் நிறுவுவதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஃப்ரீ பேசிக்ஸ் சேவைகள் மூலம் சில அடிப்படை சேவைகளை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனினும், புகைப்படம், வீடியோ போன்றவற்றை தரவேற்றம் (Upload) செய்ய கட்டணம் வசூலிக்கப்படும்.

வலுக்கும் எதிர்ப்பு!

மொபைல் நெட்வொர்க் சேவை நிறுவனங்களுக்கும் இந்தச் சேவை களுக்கும் இடையிலான தெளிவான உடன்படிக்கை ஏதும் இல்லாத நிலையில், இப்படி பல வகையிலும் அதற்கு எதிராக எதிர்ப்புகள் வலுக்கவே ட்ராய் தற்காலிகமாக இந்தச் சேவையை இந்தியாவில் முடக்கியுள்ளது. (இந்தியாவுக்கு அடுத்து எகிப்தும் இந்த ஃப்ரீ பேசிக்ஸ் சேவைக்கு தடை விதித்துள்ளது!) உலகின் இருநூற்றுக்கும் மேற்பட்ட  நாடுகளில் வெறும் 36 நாடுகள்  மட்டுமே இந்த ஃப்ரீ பேசிக்ஸுக்கு அனுமதி அளித்திருக்கிறது.

www-வை அதாவது, Worldwideweb-ஐ கண்டுபிடித்த இணையத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டிம் பெர்னர்ஸ் லீ ஃபேஸ்புக்கின் ‘ஃப்ரீ பேசிக்ஸ்’ சேவையை நிராகரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அது ஒரு முழுமையற்ற சேவை என்று குறிப்பிடும் அவர், அது ஒரு இன்டர்நெட் சேவையே அல்ல என்றும் சொல்லி இருக்கிறார். தவிர, ஜுமோட்டோ, பேடிஎம், மவுத்ஷட் டாட்காம் ஆகிய நிறுவனங்களும் இதற்கு எதிராக ட்ராய்க்கு கடிதம் எழுதி உள்ளன. ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்களும், மாணவர்களும்கூட இதற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

என்ன பாதகம்?

அப்படி ‘ஃப்ரீ பேசிக்ஸ்’ சேவையில் என்னதான் பிரச்னை, அதன் பிசினஸ் தந்திரம் என்ன, இதன் சாதக, பாதகங்கள் என்ன போன்ற சந்தேகங்களை நாவி.ஆர்க் ஃபவுண்டேஷன் நிறுவனரும், இணையம்சார் சட்ட நிபுணருமான நா.விஜயசங்கரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

“ஃபேஸ்புக்கின் நிபந்தனைகளுக்குட்பட்டு, இணையத்தில் சில அடிப்படை வசதிகளை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதுதான் ஃப்ரீ பேசிக்ஸ் சேவையின் பிசினஸ் மாடல். மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களுடன் இணைந்து செய்துகொள்ளும் ஏற்பாடுகளின்படி, ‘டேட்டா பேக்’ இல்லாமல் இலவசமாக மொபைலில் மட்டுமே இயங்கும் இந்த ஃப்ரீ பேசிக்ஸ் சேவையில் இணையதளதாரர்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இது கிட்டதட்ட கூகுள் போன்ற தேடுதல் பொறியைப் போல செயல்படும். ஃபேஸ்புக் தனது பிராக்ஸி சர்வர் மூலம் பயனாளிக்குத் தேவையான தகவல்களை இணையம் இல்லாமல் தருவதற்கு ஏற்பாடு செய்யும். ஆனால், தற்போது ரிலையன்ஸ் மட்டுமே ஃபேஸ்புக்குடன் இணைந்துள்ளது. மேலோட்டமாக பார்க்கும்போது, இதனால் பொது நபருக்கு நன்மைதானே என்று தோன்றும்.

ஆனால், ஃப்ரீ பேசிக்ஸுடன் இணைந்துள்ள தளங்களில் எதுவெல்லாம் இலவசம், இலவச பயன்பாட்டுக்கு வரம்பு ஏதேனும் உண்டா, எதற்கெல்லாம் கட்டணம் உண்டு போன்றவற்றுக்கு இன்னும் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை. ரிலையன்ஸ் தவிர, வேறு எந்த நெட்வொர்க் நிறுவனமும் இதுபற்றி வாயே திறக்காமல் இருப்பது இதை உறுதி செய்வதாக உள்ளது.

‘நெட் நியூட்ராலிட்டி’ பறிபோகுமா?

பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் சேவையை துவங்கும்போது மக்களுக்கு இலவசமாக தங்கள் தயாரிப்பை கொடுத்துப் பழக்கி, பின்னர் அவர்களை அந்தப் பொருளுக்கான வாடிக்கையாளர் ஆக்குவது நிறுவனங்களின் வர்த்தக உத்திகளில் ஒன்று. ஃபேஸ்புக்கும் அதைத்தான் செய்கிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. எப்போது இணையத்தில் பொதுவாக உள்ள சேவைகளுக்கு வரம்புகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படு கின்றனவோ, அப்போது ‘நெட் நியூட்ராலிட்டி’ என்ற இணைய சமநிலை பறிபோகும் நிலை உருவாகும். ஃபேஸ்புக் தனது சேவையிலேயே தற்போது பொதுவாக உள்ளவற்றை இலவச சேவை, கட்டண சேவை என்று பிரிக்கிறது. இப்படி பிரிக்கும்போது இணைய சமநிலை பாதிக்கப்படுகிறது.

மேலும், ஃப்ரீ பேசிக்ஸ் சேவையில் இணையதளங்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டுமெனில், ஃப்ரீ பேசிக்ஸ் செயலியில் இயங்கதக்க அளவுகோல்களில் அந்தத் தளங்கள் இருக்கவேண்டும். அப்படி இல்லையெனில் அந்த ஆப்பில் தங்களை இணைத்துக்கொள்ள முடியாது.

தொழில் ரீதியான பாதிப்பு!

ஃப்ரீ பேசிக்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டால் பலருக்கு நிச்சயம் தொழில் ரீதியான பாதிப்புகள் உண்டாகும். தற்போது ஃபேஸ்புக்குடன் ரிலையன்ஸ் மட்டுமே இணைந்துள்ள நிலையில், இது சந்தையில் அனுமதிக்கப்பட்டால் மற்ற ஏர்டெல், ஏர்செல், ஐடியா வோடாபோன் உள்ளிட்ட நிறுவனங்களின் தொழில்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும். அதைத் தாண்டி தொழிலில் நிற்க வேண்டுமெனில் ஃப்ரீ பேசிக்ஸ் போலவே இவையும் தங்களுக்கென ஒரு இலவச சேவை செயலியைத் துவங்க வேண்டியிருக்கும்.

அதே சமயம், அனைத்து ஸ்டார்ட் அப் தொழில்களும், சிறு, குறு தொழில்களும் பாதிக்கப்படும். ஏனெனில் இவை தங்களுடைய தொழில்களுக்கான புரமோஷன் வேலைகளைப் பெரும்பாலும் இணையத்தின் மூலமும், குறிப்பாக ஃபேஸ்புக் மூலமும் தற்போது குறைந்த செலவில் பார்த்து வருகின்றன. இவை கட்டணமாக்கப்படும் சூழல் ஏற்பட்டால் முதலுக்கே மோசம் வரும் நிலைதான் ஏற்படும்’’ என்று எச்சரித்தார் அவர்.

ட்ராயின் பதில் என்ன?

பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள இந்த ஃப்ரீ பேசிக்ஸுக்கு தொலைதொடர்பு கட்டுப்பாட்டு வாரியமான ட்ராய் அனுமதிக்கும்முன், உறுதி செய்யப்பட வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. அவை, 1) கட்டுப்பாடுகள் ஏதுமின்றி அனைவருக்கும் பொதுவானதாக இதன் தொழில்நுட்பம் இயங்க வேண்டும். 2) எந்தவொரு இணையதளமும் இதனால் புறக்கணிக்கப் படக்கூடாது. 3) இதனோடு இணையாத சர்வீஸ் புரவைடர்கள், தங்களுடைய வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு சேவைகளை அறிமுகப்படுத்த அனுமதிக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு, அடிப்படை தகவல்கள் அனைத்தும் இலவசமாகத் தரப்பட வேண்டும் என்பது நிரந்தரமானதாக இருக்க வேண்டும். அதைத் தாண்டிய இணைய சேவை களுக்கு மட்டும் குறிப்பிட்ட கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்கிற நிலையில் இந்தச் சேவை அனுமதிக்கப்பட்டால், எல்லோருக்கும் நன்மை தருவதாக இருக்கும்.
ட்ராய் இதை எல்லாம் செய்யுமா?

Leave a Reply

Your email address will not be published.