ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் திடீர் பல்டி

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் திடீர் பல்டி

evksராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 25 வருடங்களுக்கும் மேல் சிறையில் இருக்கும் நளினி உள்பட ஏழு பேரை விடுதலை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள தமிழக அரசின் நடவடிக்கையை கோடிக்கணக்கான தமிழர்களும், அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டும் கடுமையாக எதிர்த்து வருகிறது.

இந்நிலையில் தேர்தல் நேரத்தில் இந்த விஷயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் பாதிப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு தற்போது திடீரென தமிழக காங்கிரஸ் பல்டி அடித்துள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சமீபத்தில் கூறியபோது, ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில், நீதிமன்றம் எந்த முடிவு எடுத்தாலும் அதை காங்கிரஸ் ஏற்க தயார் என்று ன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுவதாவது:

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 1999-ம் ஆண்டில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது. மேலும் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியது.

சோனியா காந்தியின் பரிந்துரையின் பேரில் நளினிக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதேபோல, ஆகஸ்டு 2000-ம் ஆண்டில் தமிழக அரசு அனுப்பிய கருணை மனுக்களை 2011-ல் ஜனாதிபதி தள்ளுபடி செய்தார்.

ராஜீவ் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் மீது பழிவாங்கும் நோக்கு இல்லாத காரணத்தால்தான் அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் 11 ஆண்டு காலம் அவசரம் காட்டாமல் இருந்தது.

இந்த காலதாமதத்தை காரணம் காட்டிதான் கடந்த பிப்ரவரி 2014-ல் உச்ச நீதிமன்றம் ராஜீவ் படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பு வழங்கியது. அதேநேரத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை மாநில அரசு விரும்பினால் விடுவிக்கலாம் என்றும் அத்தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இதற்கு உச்ச நீதிமன்றமே பிறகு இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கு குறித்து இறுதியாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளின் தண்டனையை தமிழக அரசு தன்னிச்சையாக குறைக்க முடியாது. மத்திய புலனாய்வுத்துறை அமைப்பு விசாரணை செய்து மத்திய சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றம் வழங்கிய தண்டனையை மாநில அரசு குறைக்க முடியாது. இதுதொடர்பாக மாநில அரசு தண்டனை குறைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனில் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ராஜீவ் கொலையாளிகள் தண்டிக்கப்படுவதை நீதிமன்றத்தின் போக்கிற்கே விட்டுவிடுவதைத் தான் அணுகுமுறையாக கொண்டிருக்கிறது. இதில், நீதிமன்றம் எந்த முடிவெடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது”

இவ்வாறு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply