“முதல்வரையோ, பிரதமரையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
பிரதமர் மோடி- முதல்வர் ஜெயலலிதா சந்திப்பை கொச்சைப்படுத்தி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசியதாகவும், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் கடந்த மூன்று நாட்களாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றானர். இந்நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் தான் பேசியது குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விளக்கமளித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
“முதல்வரையோ, பிரதமரையோ அவமதிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. முதல்வர்- பிரதமர் சந்திப்பு பற்றிய என் கருத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை. என்னைப்பொறுத்தவரை நான் சொன்னதில் தவறில்லை. தவறாக புரிந்து கொண்டார்கள். இன்று ஜெயலலிதாவைப் பற்றி பேசியதற்காக கைது செய்ய வலியுறுத்துபவர்கள் முன்பு என் தலைவி சோனியா பற்றியும், என் தனிப்பட்ட குடும்பத்தை பற்றியும் பேசியது நியாயமா? பிரதமர்- முதல்வர் சந்திப்பு குறித்து நாள் தெரிவித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை.
என் மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறேன். எனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காங்கிரஸ்காரர்களை கைது செய்து பொய் வழக்கு போடுகிறது காவல்துறை. சேலம், கோவை போன்ற நகரங்களில் எங்கள் கட்சியினரை கைது செய்திருக்கிறார்கள். எனது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.