ஓடிப்போன அம்மா, இரண்டாம் திருமணம் செய்து கொண்ட அப்பா நாசர், என குடும்பத்தில் பல வெறுப்புகளை அனுபவித்த ஜீவாவுக்கு பெண்கள் என்றாலே கசக்கிறது. நண்பர்கள் சந்தானம், வினய் ஆகியோருடன் சேர்ந்து கடைசிவரை திருமணமே செய்துகொள்ள கூடாது என்று சபதம் ஏற்கிறார்கள்.

இந்நிலையில் ஜீவா வேலை செய்யும் விளம்பரக் கம்பெனியில் நடிக்க வருகிறார் ஆண்ட்ரியா. தன்னை ஜீவா பார்த்து ஜொள்ளுவிடுவார் என்று நினைத்த ஆண்ட்ரியாவுக்கு ஜீவா அவரை அலட்சியம் செய்ததால் கோபம் அடைகிறார். அவரிடம் அத்துமீறி நடந்துகொள்ள முயற்சிக்கும்போது ஜீவா, ஆண்ட்ரியாவின் கன்னத்தில் அறைகிறார்.

இந்நிலையில் ஆண்ட்ரியாவும் ஜீவாவும் விளம்பர படத்தின் படப்பிடிப்பிற்காக சுவிட்சர்லாந்து செல்கின்றனர். அங்கு பழைய பகையை மனதில் வைத்து மன்னிப்பு கேட்டால்தான் விளம்பரப்படத்தில் நடிப்பேன் என ஆண்ட்ரியா நிபந்தனை விதிக்க, ஜீவா மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்வதால் படப்பிடிப்பு தடைபடுகிறது.

அப்போது த்ரிஷா ஜீவாவின் படப்பிடிப்புக்கு உதவுகிறார். எனவே த்ரிஷா மிது முதலில் மரியாதை ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறுகிறது. இந்த காதலில் திடீரென பழைய நண்பர் ஒருவரால் விரிசல் ஏற்படுகிறது. த்ரிஷாவுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளையை நிச்சயம் செய்கின்றனர் அவரது பெற்றோர்கள்.

இந்நிலையில் ஜீவா-த்ரிஷா காதல் என்ன ஆனது, என்பதை மிக கவிதை நயத்துடன் க்ளைமாக்ஸில் சொல்கிறார் இயக்குனர்.

ஓடிப்போன அம்மாவின் மீது காண்பிக்கும் வெறுப்பு, அப்பாவிடம் காட்டும் ஆக்ரோஷம், ஆண்ட்ரியாவிடம் காட்டும் கோபம், த்ரிஷாவிடம் வெளிப்படுத்தும் காதல் என ஜீவா பல பரிணாமங்களை இந்த படத்தில் வெகு நேர்த்தியாக தேவையான அளவுக்கு நடித்துள்ளார்.

த்ரிஷா அழகு பொம்மையாக மட்டும் வராமல் கனமான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவரது அனுபவம் இவருக்கு கைகொடுத்துள்ளது

ஆண்ட்ரியா கவர்ச்சியில் கலக்கியுள்ளார். சந்தானம், வினய் ஆகியோர் நண்பர்கள் கதாபாத்திரத்தை சரியாக பூர்த்தி செய்துள்ளனர். சந்தானம் காமெடி நீண்ட நாளைக்குப் பின் விழுந்து விழுந்து சிரிக்கும்படியாக உள்ளது.

ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் அனைத்து பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் மெலடி. ஆர்ப்பாட்டமில்லாத பின்னணி இசை.

இயக்குனர் அஹ்மத், ஒரு மென்மையான காதல் கதையை தெளிவான திரைக்கதையில் அழகாக நகர்த்தியுள்ளார். க்ளைமாக்ஸை மிக அருமையாக அமைத்துள்ளார்.  எல்லா படங்களிலும் வரும் தண்ணியடித்துவிட்டு உளறும் நண்பர்கள் காட்சிகள் வெறுப்பை தருகிறது. என்றாலும் இந்த புன்னையில் வசீகரம் உண்டு.

Leave a Reply