ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி கடலோர மற்றும் ராயலசீமா பகுதிகளில், 58வது நாளாக நேற்று பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. சீமாந்திரா பகுதிகளில் உள்ள 13 மாவட்டங்களில் ஒருங்கிணைப்பு கூட்டுக்குழுவினர் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

வங்கிகள், தபால் நிலையங்கள், பிஎஸ்என்எல் அலுவலகங்கள் ஆகியவற்றில் இருந்த ஊழியர்களை வெளியேற்றி போராட்டக் குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வரும் 30ம் தேதி வரை நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சித்தூரில் நேற்று தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் சாலைகளில் கார், ஜீப், லாரி ஆகியவை  ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. சாலைகளின் குறுக்கே மரங்களை வெட்டிப் போட்டும், டயர்களை கொளுத்தி யும் வாகனங்களை செல்லவிடாமல் மறியலில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று  புரட்டாசி 2வது சனிக்கிழமை என்பதால் வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, சேலம், மதுரை, காஞ்சிபுரம், திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சுற்றுலா பஸ்கள் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சித்தூர் வழியாக வந்தனர். அவர்களை  சென்னை, பெங்களூர் பைபாஸ் சாலை, பலமனேர் சாலை, எம்எஸ்ஆர் கூட்டுரோடு, சித்தூர் பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைப்பு கூட்டுக்குழு, அரசு ஊழியர் சங்கம் மற்றும் அரசு பஸ் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் வழிமறித்தனர்.

எந்த வாகனங்களும் திருப்பதிக்கு செல்லக்கூடாது எனக்கூறியபடி, பஸ்களின் டயர்களில் இருந்த காற்றை வெளியேற்றி கோஷமிட்டனர். தமிழக பக்தர்களிடம், இங்கு பிரச்சனை நடந்து கொண்டிருப்பது தெரிந்தும் திருப்பதிக்கு நீங்கள் வரலாமா? என போராட்டக்காரர்கள் ஆவேசமாக கேள்வி கேட்டனர். அதற்கு தமிழக பக்தர்கள், ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம். அதற்காகத்தான் வந்தோம் என்றனர்.

அப்போது போராட்டக்குழுவினர், தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் சிதம்பரம்தான் முதன்முதலில் தெலங்கானாவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தார். அதனால்தான் மத்திய அரசும் மாநிலத்தை பிரிக்க முடிவு செய்தது. எனவே பிரச்னை தீரும் வரை இந்த பக்கம் வராதீர்கள் என்று தெரிவித்தனர். இதனால் வேறு வழியின்றி திருப்பதிக்கு செல்லாமல் ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் காற்றை நிரப்பிக் கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பினர். ஒருசில பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் நடந்தே சென்றனர். மேலும் சிலர் சித்தூரில் இருந்து ரயிலில் புறப்பட்டனர்.

Leave a Reply