shadow

28-3-baby

தும்பைப்பூ போன்ற மெல்லிய, வெள்ளை வேட்டித் துணியை நாப்கின் ஆக்கி, குழந்தைக்கு உறுத்தாமல் அணிவித்து, அதை டெட்டால் கலந்த நீரில் அலசிக் கசக்கிப் பிழிந்து, காயவைத்து உபயோகித்த காலமெல்லாம் போயாச்சு. தத்தித் தத்தி நடந்துவரும் தளிர்நடை போய், டயப்பர் அணிந்து அகன்ற கால்களோடு திணறியபடி நடந்து வருகின்றனர் நம் குழந்தைகள்.

குளிர் நாடுகளில் வீட்டுத் தரையில் கார்ப்பெட் விரிக்கப்பட்டிருக்கும். அதில் குழந்தைகள் சிறுநீர் கழித்து விட்டால், சுத்தம் செய்வது கடினம் என்பதால், டயப்பர்களை பயன்படுத்தத் தொடங்கினார்கள். மெள்ள மெள்ள நம் ஊருக்கும் வரத் தொடங்கிய டயப்பர், குழந்தையைவெளியே அழைத்துச் செல்லும்போது அணிவதாகத்தான் முதலில் இருந்தது.

ஆனால் இன்றைக்கு, கிராமங்களில்கூட அவசியப் பொருளாகிவிட்டது. குழந்தைகள் தன் மேல் உச்சா போன புடவையைக்கூட மாற்றாமல் வேலை பார்த்த அம்மாக்கள் இன்று பாட்டிகளாகி, ”என்னது இது வீடு முழுக்க உச்சா, கக்கா போயிட்டு. ஒரு டயப்பர் வாங்கி மாட்டக் கூடாதா?” என்று முகம் சுளிக்கிறார்கள்.

அடிக்கடி தரையை சுத்தம் செய்ய வேண்டாம், தூக்கத்தில் ஈரம்பட்டு, குழந்தைகள் விழித்தெழத் தேவை இல்லை என வசதிகள் அதிகம் இருந்தாலும், வெயில் நாடுகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு டயப்பரால் தொல்லைதான் அதிகம். இறுக்கமான டயப்பரை அணிவதால், குழந்தைகளின் உடலுக்குத் தேவையான காற்றோட்டம் கிடைக்காது. குழந்தைகளின் சிறுநீர், நீண்ட நேரம் டயப்பரிலேயே இருப்பதால், அதில் இருக்கும் பாக்டீரியாக்கள், குழந்தைகளுக்கு வலியையும், எரிச்சலையும் ஏற்படுத்தும்.

மேலும், சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று ஏற்படவும் இதுவே காரணம். இந்த எரிச்சலில் குழந்தைகள் சாப்பிட மறுக்கும்.
டயப்பரில் சிறுநீரை உறிஞ்ச, சோடியம் பாலி அக்ரிலேட் என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. கூடவே, நறுமணத்துக்காகவும் சில வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படலாம். கால் இடுக்குகளில் தடிப்பு ஏற்படுவதும் இதனால் தான்.

டயப்பர் பயன்படுத்தினால், குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்ற வேண்டும். ஆனால், பலரும் குழந்தைகள் அதில் மலம் கழித்ததுகூடத் தெரியாமல், அப்படியே வைத்திருப்பார்கள். இதனால் குழந்தைகள் எளிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாகி விடுகிறார்கள். இந்த கிருமித்தொற்றை தடுக்க, சில டயப்பர்களில், ஆன்டிசெப்டிக் பயன்படுத்தப்படுகிறது. இதுவும், குழந்தைகளின் மென்மையான சருமத்தை பதம்பார்த்துவிடும்.

24 மணி நேரமும், டயப்பரிலேயே சிறுநீர் கழிக்கும் குழந்தைகளால், ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பின்னரும், சிறுநீர் வருவதை பெற்றோருக்கு உணர்த்தத் தெரியாது. டயப்பர் போட்டிருப்பதாக எண்ணி, இருந்த இடத்திலேயே சிறுநீர் கழிப்பது அல்லது சிறுநீரை அடக்குவது என்கிற இரண்டு தவறுகளை செய்யத் தொடங்குவார்கள். படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இந்தப் பிரச்னைகளால், குழந்தைகள் பள்ளியில், பொது இடங்களில் கேலி, கிண்டலுக்கு ஆளாவதால் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. தூங்கும் நேரம் தவிர்த்து, குழந்தைகளை இயல்பான முறையில் சிறுநீர் கழிக்க அனுமதிப்பதும், அடிக்கடி கழிவறை அழைத்துச் சென்று, அதைப் பயன்படுத்த சொல்லித்தருவதுமே, சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்.

டயப்பர் பயன்படுத்துவதில் முக்கியமான விஷயம், அதைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது. குழந்தைகள் புழங்கும் இடங்களில் அப்படி, அப்படியே கழற்றி வீசுவது, அவர்களுக்கே சுகாதாரமானதல்ல.

குழந்தையின் வசதி என கருதி நாம் செய்வது உண்மையில் நமக்குத்தான் வசதியானது. குழந்தைகளுக்கு அல்ல. அவ்வப்போதேனும் அவர்களைக் கொஞ்சம் சுதந்திரமாக இருக்கவிடலாமே!

பெற்றோர் கவனத்துக்கு…

* குழந்தைகளுக்கு 2 வயது வரை மட்டும் டயப்பர் பயன்படுத்தலாம்.
* டாய்லெட் சென்றுதான் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க வேண்டும் என்ற பழக்கத்தை 2 வயதுக்குள் பழக்கப்படுத்திவிட வேண்டும்.
* வெளியூர்களுக்குச் செல்லும்போது, குழந்தையை வெளியே எங்கேனும் அழைத்துச் செல்லும்போது மட்டும் டயப்பர் பயன்படுத்த வேண்டும்.
* இரவு நேரத்தில் டயப்பர் பயன்படுத்தலாம். பகல் நேரங்களில், உங்கள் கண்காணிப்பில் இருக்கும்போது முடிந்தவரை டயப்பர் அணிவிக்காதீர்கள்.
* ஒரு டயப்பரை அதிகபட்சம் 4 மணிநேரம் மட்டுமே பயன்படுத்தவேண்டும். அதன் பிறகு கழட்டி விட வேண்டும்.

Leave a Reply