shadow

நீர் காக்கும் கல்வி அவசியம்
water
இந்தியா போன்ற நாடுகளில் தண்ணீரைத் தெய்வீகமாகவும் நதிகளை அன்னையாகவும் போற்றிப் புகழ்கிறோம். அதே வேளையில் மனித குலத்துக்கும் உயிர்களுக்கும் வரப்பிரசாதமாகக் கருதப்படும் நீரைப் போற்றி நிர்வகிப்பதில் தொடர்ந்து அலட்சியம் காட்டிவருகிறோம். அதனால்தானே கங்கை முதல் தாமிரபரணி வரை அத்தனை நதிகளும் குப்பை கொட்டும் இடங்களாக மாறியுள்ளன? இது போதாதென்று கடந்த சில பத்தாண்டுகளாக நதிநீரைப் பகிர்ந்துகொள்ளும் உரிமைகளுக்காக உலகம் முழுவதும் நாடுகளுக்கிடையே, மாநிலங்களுக்கிடையே பிரச்சினைகள் மூண்டுள்ளன.

மத்தியச் சுற்றுச் சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சகத்தின் அறிக்கைப்படி நகர்ப்புறங்களிலிருந்து கொட்டப்படும் கழிவுகளும் தொழிற்சாலைக் கழிவுகளும்தான் நம் நாட்டின் பிரதான நதிகளைப் பெருமளவில் மாசுபடுத்துவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21-ம் நூற்றாண்டில் தண்ணீர் என்பது அரிதான பொருளாக மாறிவரும் வேளையில் நீர் மேலாண்மையை ஆரம்பக் கல்வியிலிருந்தே கற்றுத்தர வேண்டிய அவசியம் இருக்கிறது.

உடனடித் தேவை

தண்ணீரைச் சரியான அளவில் நிர்வகிப்பதற்கான ஆய்வுகள் முதலில் தேவை. குறைந்த நீரே தேவைப்படும் உணவு விதைகளை உருவாக்கும் ஆராய்ச்சிகள் வேளாண்மையில் நடத்தப்பட்டுவருகின்றன. ஆனாலும் நீர் மேலாண்மையை மையமாக வைத்து நடக்கும் ஆய்வுகள் சொற்பமே.

பள்ளிக்கல்வி, ஆராய்ச்சிகள் மட்டுமின்றி நீர் மேலாண்மை தொடர்பான குறுகிய காலச் சான்றிதழ், பட்டயப் படிப்புகளையும் உருவாக்க வேண்டிய நேரம் இது. வேளாண்மை, விவசாய நிலங்கள், நகராட்சி அமைப்புகளில் நீர் மேலாண்மை செய்ய இதுபோன்ற குறுகிய காலப் படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்தப் படிப்புகளுக்கு உயர்கல்வித் தகுதிகள் எதுவும் அவசியமில்லை. அடிமட்ட அளவில் விழிப்புணர்வு ஆலோசனைக் கல்வியைத் தரக்கூடியவர்களை அந்தந்தப் பிராந்தியங்களிலேயே உருவாக்க முடியும். வாய்ப்புகள் ஏற்படும்போது தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளுக்கும் அவர்களைப் பணியமர்த்தலாம்.

புவி வெப்பமயமாதலின் தாக்கங்கள்

நீராதாரங்கள் மீது புவி வெப்பமயமாதல் நேரடியான தாக்கத்தைச் செலுத்துகிறது. நீர் மேலாண்மைத் தொழில்நுட்பங்களைத் தற்போது மதிப்பீடு செய்யும்போது புவி வெப்பமயமாதலின் விளைவுகளையும் சேர்த்தே பரிசீலனை செய்ய வேண்டும். அதனால் புவி வெப்பமயமாதல் ஆய்வுகளையும் நீர்மேலாண்மைக் கல்வியுடன் இணைக்க வேண்டும்.

உலக மக்கள்தொகையில் 17 %-த்தை இந்தியா பகிர்ந்துகொள்கிறது. ஆனால் உலக நீராதாரத்தில் 4% மட்டுமே இந்தியாவில் உள்ளது. வளர்ந்து வரும் மக்கள்தொகை, தொழில்மயமாதல் சூழலில் குடிநீர் வழங்கலை ஒட்டி நீர்மேலாண்மையில் நிலவும் குளறுபடிகளால் ஒரு நபருக்குக் கிடைக்கும் நீரின் அளவு குறைந்துள்ளது. போதுமான தண்ணீர் வழங்கும் முறைகள் இல்லாததால் 50% நல்ல தண்ணீர், கழிவாகப் போய்ச் சேர்கிறது. ஆறு, குளங்கள், ஏரிகளில் உள்ள நீரைச் சரியாக நிர்வகிக்காததால் அவற்றிலுள்ள 70% நீர் பயன்படுத்த முடியாமல் மாசுபட்ட நீராகிறது. நிலத்தடி நீரும் போதுமான மேலாண்மை முறைகள் இல்லாமல் மாசுபடும் நிலை உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

துல்லியமான தகவல்கள் தேவை

எந்த வளங்களை நிர்வகிப் பதற்கும் அந்த வளத்தை வெற்றிகரமாக நிர்வகிப்பதற்குச் சரியான அறிவு தேவை. நீரின் பயன்பாடுகள் மற்றும் நீராதாரம் எதிர்கொள்ளும் சவால்கள், சரியான அளவில் பயன்படுத்தவும் பாதுகாப்பதற்குமான நடைமுறைகளுக்குக் கல்வியும் ஆய்வுகளும் அவசியம்.

பல்கலைக்கழகங்கள், கல்விக்கூடங்கள், பயிற்சி நிலையங்களிலும் நீராதார மேலாண்மை என்பது அதன் அனைத்து அம்சங்களுடனும் கற்பிக்கப்பட வேண்டும்.

மாநிலங்கள், நாடுகளுக்கிடையே எழும் நீர்ப் பகிர்வு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நீர் மேலாண்மைக் கல்விதான் ஒரே தீர்வு. ஒரு நாட்டுக்குள் நீராதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குச் சரியான முயற்சிகளை எடுத்தால்தான், சர்வதேச அளவிலும் நீர் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.

Leave a Reply