தெலங்கானா மாநிலத்துக்கு எதிராக மின் ஊழியர்களும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் சீமாந்திரா பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மின்வெட்டு காரணமாக ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் மின் தடை ஏற்படும் அபாயம் உள்ளது. தனி தெலங்கானா மாநிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. புதிய மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியதால் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. சீமாந்திரா பகுதியில் கடந்த 4 நாட்களாக பந்த் நடப்பதால் 13 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டு வாகன போக்குவரத்தும் முடங்கியது. நேற்று முன்தினம் முதல் மின்வாரிய துறை ஊழியர்களும் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால், சீமாந்திரா பகுதியின் 13 மாவட்டங்களும் இருளில் மூழ்கின. நேற்றும் மின்தடை தொடர்ந்தது.

பாகாலா, கடப்பா, துவாடா ஆகிய ரயில் நிலையங்கள் மின் தடையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பனபாகாலட்சுமி, ஆந்திர மாநில வேளாண்துறை அமைச்சர் லட்சுமிநாராயணா உள்பட பல எம்பிகள் வீடுகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்பட்டது. ஸ்ரீசைலம் மின் உற்பத்தி நிலையத்திலும் தொழிலாளர் போராட்டத்தால் பிரம்மோற்சவம் நடந்து வரும் நிலையில், திருப்பதியில் மின்தடையால் பாதிப்பு ஏற்பட்டது. சீமாந்திரா பகுதியில் உள்ள முக்கிய நகரான விஜயவாடாவில் மத்திய மின் தொகுப்பு உள்ளது. ஊழியர்கள் போராட்டம் காரணமாக மத்திய மின் தொகுப்பில் இருந்து பிற மாநிலங்களுக்கு மின் சப்ளை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தெலங்கானா பகுதிகளிலும் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் தமிழகத்துக்கு மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்படும் மின்சாரம் சப்ளை செய்வதில் சிக்கல் ஏற்படும்.

இதனால் தமிழகத்தில் உள்ள வட மாவட்டங்களில் மின்தடை ஏற்பட கூடிய அபாயம் உள்ளதாக ஆந்திர மின்வாரிய தரப்பில் கூறப்படுகிறது.

விஜயநகரத்தில் கலவரம் மற்றும் வன்முறை காரணமாக கடந்த சனிக்கிழமை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையும் மீறி ஆங்காங்கு போராட்டங்கள் நீடிக்கிறது. எனினும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் ஊரடங்கு தொடர்வதாகவும் போலீசார் தெரிவித்தனர். வன்முறை தொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாகப்பட்டிணத்தில் மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரியின் அலுவலகம், காகிநாடாவில் மத்திய அமைச்சர் பல்லம் ராஜூவின் வீட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே நேற்று சந்தித்தார். ஆந்திராவில் உள்ள நிலை குறித்தும் அமைதியை ஏற்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் விளக்கினார்.

Leave a Reply