வான வேடிக்கையால் மக்களை வியப்பில் ஆழ்த்தி புத்தாண்டில் புதிய உலக சாதனை படைக்க துபாய் ஆயத்தமாக உள்ளது. துபாயில் வரும் புத்தாண்டு அன்று பிரமாண்ட வான வேடிக்கைகள் நடத்தி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த சாதனைக்கான ஆயத்த வேலைகள் படு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புத்தாண்டு தினத்தன்று மாலை மிகப்பெரிய அளவிலான வான வேடிக்கை ஒன்றை நடத்தி பழைய வான வேடிக்கை சாதனையை முறியடிக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக பாம் ஜுமெரியா பகுதிக்கும் உலகத்தீவுப்பகுதிக்கும் இடைப்பட்ட 100 கிலோ மீட்டர் பரப்புடைய கடல் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த கண்கவர் வானவேடிக்கைக்காக 200 வானவேடிக்கை வீரர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர். இவர்கள் 100 கம்யூட்டர்கள் துணையுடன் 400 இடங்களில் 4 லட்சம் வானவேடிக்கைகளை நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த வானவேடிக்கை நிகழ்ச்சியில், பறக்கும் பருந்து, 10 கிலோ மீட்டர் அகலமுள்ள சூரிய உதயம், தேசியக்கொடி, வானில் 6 நிமிட வானவேடிக்கை நடன நிகழ்ச்சி என பிரம்மாண்டமான, வித்தியாசமான பல அம்சங்கள் நடத்தப் பட உள்ளது.
அதேசமயம் இந்த பிரம்மாண்ட வானவேடிக்கையைப் பார்க்க வரும் மக்களுக்கும், சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கும் சிறப்பான பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படும் எனவும் துபாய் நிர்வாகம் வாக்குறுதி அளித்துள்ளது.
இதற்கு முன் 2012 ஆம் ஆண்டு குவைத்தில் நடைபெற்ற வான வேடிக்கை நிகழ்ச்சிதான் மிக பெரிய வான வேடிக்கைக்கான கின்னஸ் சாதனையாக கருதப்பட்டது. இந்த சாதனையை வெறும் 60 நொடிகளில் துபாய் முறியடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.