சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழகத்தில் அக்கட்சியின் அவசரச் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு விஜயகாந்த் தலைமை வகித்தார். இளைஞரணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ், பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோ, கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் உள்பட சட்டப்பேரவை உறுப்பினர்களும், செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அவைத் தலைவர் பதவியை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்தலைவராகவும், தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினராகவும், கட்சி அவைத் தலைவராகவும் செயல்பட்டு வந்த பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் தான் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டு, எழுத்துப்பூர்வமாக விஜயகாந்த்துக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அவைத் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகியதை செயற்குழு ஏகமனதாக ஏற்றுக் கொள்கிறது. மேலும் தேமுதிகவில் அவைத் தலைவர் என்கிற பதவி இனி தேவையில்லை என்ற கருத்து செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அனைவராலும் வலியுறுத்தப்பட்டதன் காரணமாக, அந்தப் பதவி முற்றிலுமாக நீக்கப்படுவதை ஏகமனதாக அங்கீகரிக்கிறது.
தேமுதிகவின் பல்வேறு பதவிகளுக்கு புதியதாக நிர்வாகிகளை நியமனம் செய்வதற்கும், விடுவிப்பதற்கும், பதவிகளை மாற்றம் செய்வதற்கும் கட்சித் தலைவர் விஜயகாந்த்துக்கு செயற்குழு அதிகாரம் வழங்குகிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேமுதிகவில் மொத்தம் 64 மாவட்டங்கள் உள்ளன. இதில் மாவட்ட அளவில் அவைத் தலைவர் பதவிகள் உள்ளன. இந்த அவைத் தலைவர் பதவிகளும் நீக்கப்படுமா என்ற சந்தேகம் மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது.
“திமுகவில் அவைத்தலைவர் பதவி இல்லை. பண்ருட்டி ராமசந்திரனுக்காகத்தான் தேமுதிகவில் அவைத் தலைவர் பதவியை ஏற்படுத்தினோம். இப்போது அவர் விலகிவிட்ட நிலையில், வேறு யாருக்கும் கொடுக்கக் கூடாது என்பதற்காக அந்தப் பதவி எடுக்கப்படுவதாக’ கூட்டத்தில் விஜயகாந்த் கூறியுள்ளார்.
கூட்டத்தில் நிறைவேற்றபட்ட இதர தீர்மானங்களாவன, மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது, பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது உள்பட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தையும் விஜயகாந்த்துக்கு செயற்குழு ஏகமனதாக வழங்குகிறது.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய மறுதினமே முள்ளிவாய்க்கால் முற்றத்தை தமிழக அரசு இடித்துத் தள்ளியது. இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதைச் செயற்குழு கண்டிக்கிறது.
ஜாதிக் கலவரத்தைத் தடுக்கிறோம் என்ற பெயரில் பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சர்வாதிகார ஆட்சி நடக்கிறதோ என்ற ஐயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையைச் செயற்குழு கண்டிக்கிறது. மின்வெட்டு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணாமல் அதிமுக அரசு, மத்திய அரசு மீது பழியைச் சுமத்தி வருகிறது. இதன் மூலம் விவசாயம் மற்றும் அனைத்து தொழிற்துறையையும் முடக்கியுள்ள சூழ்நிலையை உருவாக்கிய தமிழக அரசைக் கண்டிக்கிறோம்.
இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். மத்திய அரசுக்குக் கடிதங்களை மட்டும் முதல்வர் ஜெயலலிதா எழுதிவிட்டு, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்.
மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு உலை வைக்கும் இந்தப் போக்கை மத்திய மாநில அரசுகள் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மக்களவைத் தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணியே மகத்தான வெற்றிபெறும் என்று செயற்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார். இந்தக் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் தொடர்பாக விஜயகாந்த் எதுவும் பேசவில்லை. ஆனால் தேமுதிக பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோ, கொள்கைப் பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், பார்த்தசாரதி எம்.எல்.ஏ. ஆகியோர் பண்ருட்டி ராமச்சந்திரனை பற்றி மிகவும் காட்டமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
விஜயகாந்த் பேச்சு:
மக்களவைத் தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணியே மகத்தான வெற்றிபெறும்.தேமுதிகவில் இருந்து யார் போனாலும், எனக்குக் கவலை இல்லை. என்னை நம்பியே கட்சியைத் தொடங்கினேன். மக்களும் எனக்காகத்தான் வாக்களிக்கின்றனர். போகிறவர்கள் போகலாம் கட்சி தொடர்பாக நான் எடுப்பதுதான் முடிவு. இதைப் பிடிக்காதவர்கள் கட்சியில் இருந்து போவதாக இருந்தால் போகலாம் என்று அவர் கூறியுள்ளார். கூட்டத்தில் சி.எச்.சேகர் உள்பட மூன்று எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை.
Leave a Reply
You must be logged in to post a comment.