shadow

கடத்தல் கொள்ளையனை சுட்டு உறவினரை மீட்ட துப்பாக்கி சுடும் வீராங்கனை

துப்பாக்கி சுடும் வீராங்கனை ஒருவருக்கு தான் பெற்ற பதக்கங்களால் நன்மை இருந்ததோ தெரியவில்லை, ஆனால் கடத்தல் கொள்ளைக்காரன் ஒருவனிடம் இருந்து தனது கொழுந்தனை துப்பாக்கியால் சுட்டு மீட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சினிமாவில் நடைபெறுவது போன்று பரபரப்பாக நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்தவர் ஆசிப் என்ற 22 வயது இளைஞர் டெல்லி யுனிவர்சிட்டியில் படித்து கொண்டே பகுதி நேரமாக வாடகை கார் ஓட்டி வருகிறார். கடந்த 23-ம் தேதி இவரது காரில் முகமது ரஃபீ, ஆகாஷ் என்ற இரண்டு பேர் ஏறினர். கார் போபரா அருகே சென்ற போது, கத்தியை காட்டி காரை நிறுத்தக் கூறினர். ஆசிப் கையில் இருந்த பர்சை பிடுங்கிக் கொண்டனர். அதில் பணம் குறைவாக இருந்ததால், வீட்டுக்கு ஃபோன் செய்ய சொன்னார்கள். ஆசிப் ஃபோன் செய்தார். அதைப் பிடுங்கிய அவர்கள், ’உங்கள் மகனை கடத்தி வைத்திருக்கிறோம். 25 ஆயிரம் ரூபாய் தந்தால் உயிரோடு விடுவோம். பணத்தோடு நாங்கள் சொல்லும் இடத்துக்கு வரவேண்டும்’ என்று மிரட்டினர்.

இதுகுறித்து ஆசிப் குடும்பம் போலீசில் புகார் செய்தது. ஆசிப்பின் அண்ணன் மனைவி ஆயிஷா துப்பாக்கிச் சுடும் வீராங்கனை. தேசிய அளவில் பல பதக்கங்கள் வென்ற இவர், கொள்ளையர்கள் சொன்ன இடத்துக்கு சென்றார். மஃப்டியில் போலிசாரும் பின் தொடர்ந்தனர். ஆயிஷா கையில் .32 வகை பிஸ்டலை எடுத்துச் சென்றிருந்தார்.

கொள்ளையர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றது பணத்தை கொடுக்க முயன்றபோது திடீரென, தான் வைத்திருந்த பிஸ்டலால், கடத்தல்காரர்களை குறி பார்த்துச் சுட்டார். இதில் ஒருவனின் தோளிலும் மற்றொருவனின் காலிலும் குண்டு பாய்ந்தது. உடனடியாக விரைந்து வந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்கள் மூலம் பரவி வீராங்கனைக்கு பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Leave a Reply