டெல்லி காவல்துறையினர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்படும் வரை தர்ணா போராட்டம் தொடரும் என்றும், தங்களது கோரிக்கை நிறைவேறாவிட்டால் டெல்லியில் குடியரசு தின விழாவை நடத்தவிடமாட்டோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை செய்துள்ளதால் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்தான் போலீஸ் துறை உள்ளது. தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தங்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று டெல்லி முதல்வர் தனது கட்சி தொண்டர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் டெல்லியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி காவல்துறையினரின் உதவியுடன் பல இடங்களில் விபச்சாரம் நடப்பதாகவும், அதை தடுக்க சென்ற ஆம் ஆத்மி தொண்டர்கள் மீது அத்துமீறி காவல்துறையினர் தாக்கியதாகவும் டெல்லி காவல்துறை மீது முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் டெல்லி காவல்துறையில் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும், அவர்களை கட்டுப்படுத்த மாநில அரசுக்கு உரிமை வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆம் ஆத்மியின் தர்ணா போராட்டத்தால் நேற்று டெல்லியில் மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்பட்டன. அதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். இந்த தர்ணா போராட்டத்தை காங்கிரஸ் மற்றும் பாஜக கண்டித்துள்ளது. ஆம் ஆதிமியின் இந்த போராட்டத்தை கிரன்பேடியும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Leave a Reply