டெல்லி முதல்வராக பதவியேற்றிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், சென்ற 2012ஆம் ஆண்டு காசியாபாத் என்ற இடத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ‘நாடாளுமன்றத்திற்கு கொள்ளைக்காரர்களும், கொலைகாரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறினார். இவருடைய பேச்சை காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா தலைவர்கள் கடுமையாக கண்டித்தனர்.

இந்நிலையில் டெல்லியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் விபோர் ஆனந்த் என்பவர் டெல்லி நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர்ந்தார். ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட எம்.பிக்களை கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் என விமர்சித்த அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேசத்துரோக வழக்கு பதிய அனுமதி கொடுக்குமாறு கோரியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை டெல்லி நீதிமன்றத்திற்கு வந்த விபோர் ஆனந்த், ‘தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருப்பதால் தாம் தொடுத்த வழக்கை வாபஸ் பெறுவதாக நீதிபதியிடம் தெரிவித்தார். அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு வாபஸ் பெற்றதாக அறிவித்தார்.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியினரின் அச்சுறுத்தல் காரணமாகத்தான் சட்டக்கல்லூரி மாணவர் வழக்கை வாபஸ் பெற்றதாக பாரதிய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

Leave a Reply