shadow

நாளை தித்திக்கும் தீபாவளி. முதல்வர் உள்பட தலைவர்கள் வாழ்த்து
deepavali
இந்துமக்களின் மிகப்பெரிய பண்டிகையாக கருதப்படும் தீபாவளி திருநாள் நாளை தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடை உடுத்தி, இனிப்புகள் சாப்பிட்டு பட்டாசு வெடிக்கும் இனிமையான தினம். இந்த தீபாவளி திருநாளை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தற்போது பார்ப்போம்

முதலமைச்சர் ஜெயலலிதா: “மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து  நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.

தீபாவளித் திருநாளில் மக்கள் அதிகாலை எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி,  வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டி கையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

இந்த இனிய திருநாளில்,  நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும், அனை வரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய தீபாவளி  நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.”

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: “கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதைத்து மக்களை காத்தபோது நரகாசுரன் தன்னை வதைத்த தினத்தை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்தினால் வீடுகளில் தீபஒளி ஏற்றி மனஇருள் நீக்கி கொண்டாடும் பண்டிகை தான் தீபாவளி திருநாள்.

ஸ்ரீ இராமசந்திரமூர்த்தி இலங்கையில் இராவணனை அழித்து தனது வனவாசத்தையும் முடித்து சீதை, லெட்சுமணனுடன் அயோத்தி மாநகரம் வந்து முடிசூட்டி கொண்ட நாளை அயோத்தி மக்கள் வீடெல்லாம் விளக்கேற்றி தீபாவளி பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். இருளை அகற்றி ஒளி ஏற்றிய தீபாவளி திருநாளை இன்றும் நம் நாட்டு மக்கள் கண்கூடாக கண்டு மகிழ்கிறார்கள்.

தீபாவளி நாளில் வரும் மாசுகளை உடனே அகற்றி தூய்மையானதாக நம் வீட்டையும் நாட்டையும் உருவாக்குவோம். நாட்டு மக்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழ இத்தீபாவளி திருநாளில் ஆதி பராசக்தியை பிரார்த்திக்கிறேன்.”

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன்: ஒளிமயமான தீபாவளி அனைவர் வாழ்க்கையிலும், வெளிச்சத்தைக் கொண்டு வரும் சாத்தியக் கூறுகள் மத்திய நல்லாட்சியின் திட்டங்களினால் வந்திருப்பது மகிழ்ச்சி, அன்னிய முதலீட்டில் முதல்நாடு, காஸ் மானியம் நேரடியாக வழங்குதல், சிறந்த காப்பீட்டுத் திட்டங்கள், ஏழைகள் பயன்படும்படி முத்ரா திட்டம், வங்கிக் கணக்கு திட்டம் என ஒளி வெள்ளத்தில் ஒளியில், இருள் சூழ்ந்த வறுமையில் இருந்து விடுபட இந்த தீபாவளி வழிவகுக்கும். லஞ்சம், கறுப்புப்பணம், ஊழல் என்ற அரக்கர்கள் ஒழிக்கப்பட்டு அதை நிரூபித்த மாபெரும் சக்தியாக மோடி திகழ்கிறார். ஆக மக்கள் பணம் களவாடப்படாத தீபாவளியாக வரும் தீபாவளிகள் இருக்கும்.”

Leave a Reply