பெற்ற தாய்க்கு மகள் செய்து வைத்த நெகிழ்ச்சியான திருமணம்

பெற்ற தாய்க்கு மகள் செய்து வைத்த நெகிழ்ச்சியான திருமணம்

ஒவ்வொரு குடும்பத்திலும் தாய் தான் மகளுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். ஆனால் ராஜஸ்தானில் உள்ள ஒரு மகள் தனது விதவைத்தாய்க்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்த கீதா அகர்வால் என்ற 53 வயது பெண்ணின் கணவர் முகேஷ் குப்தா மாரடைப்பு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கீதாவின் இளைய மகள் சன்ஹிடா வேலை காரணமாக ஜார்கண்ட் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் தனது தாயை தனியாக விட்டு செல்ல விருப்பமில்லாத அவர், தாய்க்கு பொருத்தமான வரனை தேட முடிவு செய்து தனது தாயின் தகவல்களை திருமண வலைதளத்தில் பதிவு செய்தார்.

முதலில் தாய் கீதா மறுப்பு தெரிவித்தாலும் பின்னர் மகளின் அன்புக்கட்டளைக்கு பணிந்தார். கீதாவின் உறவினர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தபோதிலும் அதனை கண்டுகொள்ளாத சன்ஹிடா, ராஜஸ்தான் பன்ஸ்வாரா பகுதியை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் கே.ஜி.குப்தா என்பவரை தனது தாய்க்கு சரியான வரனாக தேர்வு செய்தார்.

கே.ஜி.குப்தாவின் மனைவி கடந்த 2010ஆம் ஆண்டு கேன்சர் நோயின் காரணமாக உயிரிழந்தார் என்பதும், அவருக்கு இரண்டு மகன்கள் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து குப்தா-கீதா திருமணத்தை எளிய முறையில் நடத்தி வைத்தார் சன்ஹிடா. மேலும் திருமணத்திற்கு முன்னர் கீதா அறுவை சிகிச்சை மூலம் தனது கருப்பையை நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply