shadow

முதலிடம் கிடைத்துள்ளதால் வெட்கி தலைகுனிந்துள்ள இந்தியா

பொதுவாக எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு சாதனையில் முதலிடம் பெற்றால் அந்த நாடு பெருமைப்பட்டு கொள்ளும். ஆனால் முதலிடம் கிடைத்ததால் இந்தியா தலைகுனிந்து காணப்படுகிறது. ஏன் தெரியுமா? ஊழலில் முதலிடம் கிடைத்தால் எப்படி தலைநிமிர்ந்து இருக்க முடியும்?

‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ என்ற ஜெர்மனி அமைப்பு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஊழல் மிகுந்த நாடுகள் குறித்த பட்டியல் ஒன்றை தயார் செய்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மொத்தம் 16 நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றன. ஊழல் மிகுந்த நாடுகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. நேரடியாக 22 ஆயிரம் மக்களிடமும், இணையதளம் வாயிலாக மில்லியன் கணக்கானோர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. இந்த கருத்துக்களுக்கு பின்னர் விரிவான ஆய்வறிக்கை ஒன்று இன்று வெளியானது.

இந்த கருத்துக்கணிப்பின்படி இந்தியாவில் லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்று 69% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக கல்வி நிறுவனங்கள், பொது மருத்துவமனைகள், போலீஸ் துறை, நீதித் துறை, வரி ஆகியவற்றின் சேவைகளைப் பெற லஞ்சம் அளிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஊழல் மிகுந்த ஆசிய-பசிபிக் நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் வியட்நாம் உள்ளது. அங்கு 65 சதவீத மக்கள் லஞ்சம் அளித்து அரசு சேவைகளைப் பெறுகின்றனர். பாகிஸ்தானில் 40 சதவீத மக்களும் சீனாவில் 26 சதவீத மக்களும் லஞ்சம் அளிக்கின்றனர்.

ஊழல் மிகவும் குறைந்த நாடாக ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. அங்கு 0.2 சதவீத மக்கள் மட்டுமே லஞ்சம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர். தென்கொரியாவில் 3 சதவீத மக்கள் மட்டுமே லஞ்சம் கொடுத்து அரசு சேவைகளைப் பெறுகின்றனர்.

Leave a Reply