shadow

egg1(1)

மலிவான விலையில், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒர் உணவு முட்டை. ஃபோலேட், பாஸ்பரஸ், செலினியம், ஜிங்க், வைட்டமின் ஏ, டி, இ, கே, பி5, பி12, பி2, பி6 மற்றும் கால்சியம் என இதில் இருக்கும் சத்துப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒருவர், சரியான உணவு பட்டியலை தயார் செய்யும்போது, அதில் முட்டையும் இருக்கும் பட்சத்தில் ‘டயட் லிஸ்ட்’ முழுமை பெறும்.

1. முட்டையை வாங்கும் முன் சுத்தமாக, வெள்ளையாக உள்ளதா எனப் பார்த்து வாங்க வேண்டும். பழைய முட்டையாக இருந்தால், மைல்டான பழுப்பு நிறத்தில் தெரியும். முட்டையை வாங்கியதும் ப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கலாம். ஆனால், 3 வாரத்துக்கு மேல் வைக்கக் கூடாது.

2. முட்டையை ப்ரிட்ஜில் வைப்பதே நல்லது. அதுவும் முட்டை வைப்பதற்குரிய இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும். ஏனெனில், அந்த இடத்தில்தான் முட்டைக்குத் தேவையான தட்பவெப்ப நிலை கிடைக்கும். முட்டை கெடாமலும் பாதுகாக்கும்.

3. முட்டையைக் கையில் எடுக்கும் போது அதிகக் கவனம் தேவை. கை நழுவி கீழே விழுந்தால் அதில் இருக்கும் நுண்கிருமிகளும், துர்நாற்றமும் வீட்டின் சூழலையே மாற்றிவிடும். கை, நகங்களில் பட்டால் கூடப் பரவத் தொடங்கும்.

4. ஒரு பவுலில் முட்டையின் அளவை விட இரண்டு மடங்கு தண்ணீரை நிரப்பி அதில் முட்டைகளைப் போடுங்கள். ஃப்ரெஷ்ஷான முட்டை எனில் நீரில் ப்ளாட்டாகச் சாய்ந்து இருக்கும். பழைய முட்டையாக இருந்தால் முட்டையின் கூர்மையான நுனி பகுதி பாத்திரத்தில் பட்டு நிற்கும் நிலையில் காணப்படும். எந்த முட்டையாவது மிதந்தால் அதைச் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

5. ஒரு முட்டையைக் கையில் எடுத்து காது அருகில் வையுங்கள். மென்மையாக அதனை ‘ஷேக்’ பண்ணுங்கள். பிறகு, 10 நொடிகள் காது அருகிலே முட்டையை வைத்திருங்கள். சத்தம் எதுவுமே வரவில்லை எனில் அது நல்ல முட்டை. எதாவது சின்னச் சத்தம் வந்தால் அவற்றைச் சமைக்காமல் விட்டுவிடுவது நல்லது.

6. முட்டையைத் தோசை தவாவில் உடைத்து ஊற்றும் போது மஞ்சள் கரு சிறிது மேலெழும்பி இருந்தால் அது ப்ரெஷ். அதே மஞ்சள் கரு கொஞ்சம் தளர்வாகக் கீழே அமுங்கி இருந்தால் அது கொஞ்சம் பழைய முட்டை எனக் கண்டுபிடித்து விடலாம்.

7. முட்டையில் சால்மோநெல்லா (Salmonella) என்ற கிருமியும், மற்ற கிருமிகளும் இருக்கும் என்பதால் பச்சையாகச் சாப்பிடவே கூடாது. சமைக்கப்பட்ட முட்டையைச் சாப்பிடுவதே நல்லது.

8. சமைக்கப்பட்ட முட்டையை 2 மணி நேரத்துக்குள் சாப்பிட்டு விட வேண்டும். முட்டையை எந்த முறையில் வேண்டுமானாலும் சமைத்துச் சாப்பிடலாம். ஆனால், மிகச் சிறந்த தேர்வாக இருப்பது வேக வைக்கப்பட்ட முட்டையே.

9. குளிர்ச்சித் தன்மை இல்லாத சூழலில் முட்டையைப் பாதுகாத்துப் பயன்படுத்த வேண்டிய சூழல் இருந்தால் வாங்கிய 3 நாட்களுக்குள் சமைத்து விட வேண்டும். மூன்று நாட்களுக்கு மேல் வெளியில் வைத்திருக்கும் முட்டையைச் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

Leave a Reply