இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம், அனைத்து கட்சிகளின் முழு ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் கொண்ட வந்த தீர்மானத்தில், “தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை நாட்டில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்றும்; பெயரளவிற்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும்; இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும்; இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று கூறியிருந்தார்.

இந்த தீர்மானத்துக்கு திமுக, தேமுதிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply