பொள்ளாச்சி: திண்டுக்கல் மாவட்டம் நீலமலை கோட்டை கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் சுபா (20). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பொள்ளாச்சி அடுத்த புளியம்பட்டியில் தனியார் பாலிக்டெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறார். பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு விடுதியில் தங்கி உள்ளார்.கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் வால்பாறையை சேர்ந்த தோழி வீட்டுக்கு சுபா அடிக்கடி செல்வார். அப்போது தோழியின் அப்பாவின் நண்பரும் மர வியாபாரியுமான செல்வம் (38) என்பவருடன் சுபாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. செல்வம் சுபாவுக்கு போன் செய்து பேசுவது வழக்கம்.கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுபாவிடம் செல்போனில் பேசிய செல்வம், உன்னை காதலிக்கிறேன். திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுபா, ‘உங்களை அப்பா மாதிரி நினைத்துதான் பழகினேன். காதலிக்கவில்லைஎன கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி செல்வம் மீண்டும் சுபாவுக்கு போன் செய்து, ‘நடந்ததை மறந்துவிடு. தீபாவளிக்கு புது துணி எடுத்து தருகிறேன். வா என அழைத்துள்ளார். செல்வம் வந்த காரில் சுபா ஏறினார். காரில் செல்வம் தவிர அவரது நண்பரான சதீஷ் (24) இருந்தார். காரை டிரைவர் ராஜா (33) ஓட்டினார்.கார் பொள்ளாச்சியை தாண்டி பல்லடம் ரோட்டில் சென்றதும் சுபாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.சுபா கேட்டபோது, ‘உன்னை திருமணம் செய்யத்தான் கடத்தி வந்துள்ளேன் என செல்வம் மிரட்டியுள்ளார். சுபா கூச்சல் போடவே, மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து சுபாவின் முகத்தில் கொட்டியுள்ளார். இதில் அவரது முகம் வெந்தது.

அவரிடமிருந்து தப்பிக்க நினைத்து சுபா, ‘திருமணத்துக்கு சம்மதிக்கிறேன்Õ என கூறியுள்ளார்.பின்னர் சுபாவை ஒட்டன்சத்திரத்தில் ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். 4 நாட்களாக சுபா மருத்துவமனையில் இருந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் செல்வமும், சதீசும் வெளியில் சென்றபோது, சுபா பெற்றோருக்கு போன் செய்து விவரத்தை கூறியுள்ளார். அவர்கள் ஒட்டன்சத்திரம் சென்று சுபாவை மீட்டனர். இதை அறிந்து செல்வமும், சதீசும் வால்பாறைக்கு தப்பிவிட்டனர். நேற்று முன்தினம் இரவு சுபாவுடன் சென்ற அவரின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிந்து செல்வம், சதீஷ், ராஜா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Leave a Reply