சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் திருமணம், வி.ஐ.பி. வரவேற்பு போன்ற நிகழ்வுகள் என்றாலே… அங்கே கட்டாயம் அதிரும் பேண்ட் இசை! முழுக்க ஆண்களே கோலோச்சும் இந்த இசையை, தற்போது கல்லூரிப் பெண்களும் கையில் எடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி பெண்கள் கல்லூரி மாணவிகள் 30 பேர் இணைந்து, கல்லூரி நிகழ்ச்சிக்கு பேண்ட் இசைப்பதுடன், வெளி நிகழ்ச்சிகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்!

இசைக்குழுவை ஒருங்கிணைத்து இயக்கி வரும் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் சுஜாதா, அதைப் பற்றி உற்சாகம் பொங்க நம்மிடம் பேசினார்.

”15 வருஷத்துக்கு முன்ன எங்க கல்லூரியில பேண்ட் இருந்துச்சு. சில காரணங்களால தொடர முடியாம போன விஷயம்… மறுபடியும் மலர்ந்திருக்கு. ‘கல்லூரியில நடக்கற சுதந்திர தினம், குடியரசு தின விழாக்கள்ல ‘மார்ச் பாஸ்ட்’ செய்யுறப்ப பேண்ட் இருந்தா… யூனிட்டி துல்லியமா இருக்கும். ஆனா, வெளியில இருந்து கொண்டுவந்தா செலவு அதிகம். மாணவிகளை வெச்சே பேண்ட் குழுவை ஏன் மீண்டும் ஆரம்பிக்கக் கூடாது’னு தோணுச்சு. நிர்வாகத்துக்கிட்ட சொன்னப்போ, ‘நல்ல விஷயம்!’னு சொன்னதோட… தேவையான இசைக் கருவிகளை வாங்கிக் கொடுத்தாங்க. 3 வருஷத்துக்கு முன்ன ‘கல்லூரி பேண்ட்’ செயல்பாட்டுக்கு வந்துச்சு. இப்போ ரெண்டு செட்… வெளியில போயாச்சு!” என்ற சுஜாதாவைத் தொடர்ந்தார், கோச் ஆனந்தஜோதி.

”முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு ஹாஸ்டல் மாணவிகளைத்தான் இதற்குத் தேர்ந்தெடுப்போம். வாரத்துல மூணு நாள், காலையில 7 – 8, மாலையில 5 – 6 மணி வரைக்கும் பயிற்சி தருவோம். யூனிஃபார்ம், இன்ஸ்ட்ரூமென்ட் எல்லாத்தையும் காலேஜுலயே கொடுத்துடுவாங்க. காலேஜ் டே, ஸ்போர்ட்ஸ் டே, குடியரசு தினம், சுதந்திர தினம்னு கல்லூரிக்குள்ளேயே வாசிச்சிட்டிருந்த பொண்ணுங்க, இப்போ வெளி நிகழ்ச்சிகளுக்கும் போறாங்க. மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உடுமலைப்பேட்டைக்கு  வந்தப்போ, அவரை ரிசீவ் பண்றதுக்கான பேண்ட் இசையை வழங்கினது எங்க கல்லூரி குழுங்கறதுல பெருமையா இருக்கு. இதுக்காக பணமும் வாங்கறதில்லை” என்றார் ஆனந்தஜோதி.

‘பேண்ட்’ குழுவின் கேப்டன் தீபிகா, ”ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறப்ப இதுல சேர்ந்தேன். 30 பேர் கொண்ட குழுவை ஒருங்கிணைக்கறது, பயிற்சிகள் பண்ண வைக்கிறது, எல்லாரையும் ஒற்றுமையா அரவணைச்சுப் போறது, எம்ப்ளம் தூக்கறதெல்லாம் என் பொறுப்பு. எல்லாருமே ஹாஸ்டல் கேர்ள்ஸ். அதனால பயிற்சி நேரம் பிரச்னை இல்ல. காலையில வார்ம் அப், ரன்னிங், பயிற்சினு ஆரம்ப காலங்கள்ல களைச்சுப் போயிட்டிருந்தோம். போகப் போக சரியாயிடுச்சு. குறிப்பா, பயிற்சிக்கு அப்புறம் கொடுக்கற கூழ், சுண்டல் ரொம்பவே பிடிச்சுப் போச்சு!” என்கிறார் கண்கள் சிமிட்டி.

தொடர்ந்த பவித்ரா, ”எங்க கல்லூரி நிகழ்ச்சிகளில் இசைக்கும்போது, உற்சாகமா பண்ணிடுவோம். ஆனா, வி.ஐ.பி. நிகழ்ச்சிகளுக்கு போறப்போ, டென்ஷனா இருக்கும். கார்ல இருந்து இறங்கும் வி.ஐ.பி-யை மேடைக்கு அழைச்சுட்டுப் போற நிமிடத்திலிருந்து, தேசிய கீதம் வாசிக்கிற வரை ஒவ்வொரு நிமிஷமும் கூடுதல் கவனத்தோட செயல்படுவோம். வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு போனா… எங்க யூனிஃபார்மை பார்த்து, ஊரே வியப்பா நிக்கும். நாங்க வாசிக்க ஆரம்பிச்சுட்டா, ஆச்சர்யமாகிடுவாங்க. செம மாஸ்தான் எங்களுக்கு!” என்றார் பெருமையுடன்.

”ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொருவிதமா வாசிப்போம். மார்ச் பாஸ்ட் ஸ்டைல், செமி சர்க்கிள், V ஷேப்னு விதவிதமா எங்க குழு ஒருங்கிணைந்து நின்று, தேசிய கீதம், வி.ஐ.பி. சல்யூட், வோட் ஆஃப் தேங்க்ஸ் மியூஸிக்னு கலக்குவோம். ‘என்னது… பொண்ணுங்க பேண்ட் வாசிக்கறாங்களா?னு வேடிக்கையாதான் பார்க்க வந்தோம். ஆனா, உங்க திறமையை அழகா நிரூபிச்சுட்டீங்க கேர்ள்ஸ்!’னு வெளியாட்கள் பலரும் பாராட்டுறப்ப, அத் தனை சோர்வும் ஓடிடும்” என்று குஷியானார் மனோன்மணி.

”இது, இசையை மட்டுமில்லாம… டிசிப்ளினையும் கத்துக் கொடுத்திருக்கு. அவங்கவங்க இன்ஸ்ட்ரூமென்ட்ஸுக்கு அவங்கவங்கதான் பொறுப்பு. தினமும் அதை சுத்தம் பண்ணணும். ஏதாவது பிராப்ளம்னா… தாராளமா சொல்லலாம். ஆனா, நாம பிராப்ளம் பண்ணிடக் கூடாது. இந்த ‘பேண்ட்’ல நாங்க இருக்கறது காலேஜ்ல எங்களுக்கு ஒரே கெத்துதான். இந்த வருஷத்தோட டிரம்ஸ் முடிஞ்சுடும், தேர்ட் இயர்ல ஒன்லி படிப்புனு நினைக்கும்போது, இப்பவே கண்ணக் கட்டுது!”

– ஜாலியாகச் சிரித்தார்கள் ‘பேண்ட்’ பெண்கள்!

Leave a Reply