குண்டான குழந்தைகளுக்கு ஆயுள் குறைவாக இருக்கும் என மருத்துவர்கள் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நகர்ப்புறங்களில் வசிக்கும் குழந்தைகளில் பெரும்பாலானோர் ஓடியாடி விளையாடுவதில்லை. வெளியே விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல், கம்ப்யூட்டர் கேம், வீடியோ கேம் என்று அதிக நேரம் உட்கார்ந்தே இருக்கின்றனர்.
விரும்பி உண்பது பாஸ்ட் புட், ஜங்க் புட் போன்ற உணவுகள் தான்.
உணவு பழக்கம் மாறி வருவதாலும், ஓடியாடி விளையாடுவது குறைந்து வருவதாலும் பெரும்பான்மையான குழந்தைகள் குண்டாக இருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் இவர்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்பட்டு வாழ்நாள் குறையும் அபாயம் இருக்கிறது.
உணவு பழக்கம், உடற்பயிற்சி உள்ளிட்ட அன்றாட செயல்பாடுகளில் இருக்கும் குறைபாடுகள் தான் சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணம்.
இது பெரியவர்களை மட்டுமின்றி தற்போது சிறுவர்களையும் அதிகம் பாதிக்கிறது.
9 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் சிலர் தொந்தியும் தொப்பையுமாக இருக்கின்றனர்.
இளம் வயதில் தொப்பை விழுவது இன்சுலின் சுரப்பை நேரடியாக பாதித்து சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
நமது பாரம்பரிய உணவுகள் குறைந்த கொழுப்பு உள்ளவை, உடலுக்கு ஆரோக்கியமானவை, நார்சத்து அதிகம் உள்ளவை, ஊட்டசத்து நிறைந்தவை.
இதில் இருந்து விலகிப் போகும் நகர்ப்புற குழந்தைகள் கொழுப்பு சத்து, இனிப்பு அதிகம் உள்ள உணவு பொருட்கள், பாஸ்ட் புட், ஜங்க் புட் போன்ற உணவுகளை நிறைய சாப்பிடுகின்றனர்.
குண்டாக இருக்கும் குழந்தைகள் 70 சதவீதம் பேர் வயதான பிறகும், குண்டாகவே இருப்பார்கள்.
இவர்களுக்கு டயபடீஸ், அதிக ரத்த அழுத்தம், இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம்.
இதன் காரணமாக இன்னும் 20 ஆண்டுகளில் சராசரி ஆயுட் காலம் குறையும் அபாயம் இருக்கிறது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.