சென்னை கடற்கரையில் இருந்து மதுரவாயில் வரை அமைக்கப்பட்டு வரும் பறக்கும் சாலைக்கு திடீரென பொதுப்பணித்துறை அனுமதி வழங்க மறுப்பதை அடுத்து, தேசிய நெடுஞ்சாலை துறை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தது. இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் பால் வசந்தகுமார், தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதில் வாதாடிய தேசிய நெடுஞ்சாலைத்துறை வழக்கறிஞர் வில்சன் ‘பறக்கும் சாலை திட்டத்திற்கு முறையாக அனுமதி வாங்கப்பட்டுள்ளது என்றும், திடீரென கூவம் ஆற்றில் தண்ணீர் செல்வதற்கு பறக்கும் சாலைக்காக ஏற்படுத்தப்படும் தூண்கள் தடையாக இருக்கும் என்ற காரணத்தை கூறி, பொதுப்பணித்துறை அனுமதி வழங்க மறுக்கிறது என்றும் கூறினார். கூவம் ஆற்றின் கரையில்தான் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் ஆற்றில் தண்ணீர் போவதற்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. மேலும் கூவம் ஆற்றி ஆழப்படுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளோம்’ என்று வாதாடினார்.

இவருடைய வாதத்திற்கு பொதுப்பணித்துறை வழக்கறிஞர் இன்று பதிலளிக்கிறார். இன்றைய வாதத்திற்கு பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply