shadow

முதல்வரின் உடல்நிலை தகவலை மக்களுக்கு தெரிவிப்பது அரசின் கடமை: சென்னை உயர் நீதிமன்றம்

jayalalithaதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அவ்வப்போது அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கை வெளிவந்து கொண்டிருந்தாலும், திமுக தலைவர் கருணாநிதி உள்பட முதல்வரின் உண்மையான உடல்நிலை என்ன என்பதை அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மை நிலவரங்களை வெளியிடக் கோரியும், அவர் பரிபூரணமாக குணமடைந்து பணிக்கு திரும்பும் வரை தற்காலிக முதல்வரை அறிவிக்கக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இதனையடுத்து நீதிபதிகள் எம்.என்.சுந்தரேசன், ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன் ஆஜரான மனுதாரர் டிராபிக் ராமசாமி, “தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மை நிலவரங்களை வெளியிடக் கோரிய எனது மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை” என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீமணி சங்கர், “தனிப்பட்ட உரிமை என்ற ஒன்று இருக்கிறது. அதன் அடிப்படையில் எல்லாவற்றையும் பொதுமக்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “மாநில முதல்வரின் உடல்நிலை குறித்த தகவலை மக்களுக்கு தெரிவிப்பது அந்த மாநில அரசின் கடமை. அவ்வாறு தெரியப்படுத்துவதில் தவறில்லை என்று கூறியதோடு, தனியார் மருத்துவமனையின் அறிக்கை அவ்வப்போது வெளிவந்தாலும் முதல்வரின் உடல்நிலை குறித்து அரசு தரப்பில் அதிகாரபூர்வமாது அறிவிப்பது கடமையாகும்” என்று கூறினார்

இதனையடுத்து இவ்விவகாரம் குறித்து அரசிடம் ஆலோசித்து விளக்கமளிப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியதை அடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும் 6ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Leave a Reply