டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகம் கொள்கின்றனர்.

மத்திய அமைச்சர் சசிதரூரை பெண் தொழிலதிபர் சுனந்தா புஷ்கார் கடந்த 2010ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் இருவருக்கும் மூன்றாவது திருமணம் ஆகும். இருவருக்குமே தனித்தனியாக குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சசிதரூருடன் பாகிஸ்தானை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாகவும், இதனால் தான் மிகுந்த வேதனையில் உள்ளதாகவும் சுனந்தா கடந்த இரண்டு நாட்களாக டுவிட்டரில் பரபரப்பான குற்றச்சாட்டை கூறியிருந்தார். இதற்கு பெண் பத்திரிகையாளர் மெஹர் கடும் கண்டனம் தெரிவித்தார். சசிதரூரை ஒரு பேட்டிக்காக ஒரே ஒரு முறை மட்டுமே தான் சந்தித்ததாகவும் அவருடன் எவ்வித தவறான உறவும் தான் மேற்கொள்ளவில்லை என்றும், சுனந்தா மனநிலை சரியில்லாமல் உளறுவதாகவும் டுவிட்டரில் பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டலில் சுனந்தா மர்மமான முறையில் இறந்துகிடப்பதாக போலீஸாருக்கு வந்த தகவலை அடுத்து டெல்லி போலீஸார் விரைந்து சென்று சுனந்தாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஓட்டல் ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பே தற்கொலையா என்பது உறுதியாக தெரியும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சுனந்தாவின் தற்கொலையால் சசிதரூரும், பெண் பத்திரிகையாளர் மெஹர் தராரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply