shadow

ஆங்கிலம் தெரியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள். இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை

david cameroonஇங்கிலாந்தில் குடியேறும் வெளிநாட்டினர் ஆங்கிலம் கற்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டு பிரதமர் கேமரூன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் தற்போது ஏராளமான வெளிநாட்டினர் குடியேற்ற உரிமை பெற்று வருகின்றனர். அவர்கள் தங்களது வாழ்க்கை துணை அதாவது கணவன் அல்லது மனைவியின் மூலம் குடியுரிமை விசா பெற்று ஆங்கிலம் தெரியாவிட்டாலும் நாட்டிற்குள் வந்துவிடுகின்றனர். இதனால் அவர்கள் வெளி மனிதர்களுடன் ஆன தொடர்பை துண்டித்து கொள்வதாக கூறப்படுகிறது. எனவே இந்த சிக்கலை தவிர்க்க இங்கிலாந்தில் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டினர் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் திறன் பெற்று இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். இதற்கான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை பிரதமர் டேவிட் கேமரூன் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பிரதமர் கேமரூன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது, “வாழ்க்கை துணை விசா’’ மூலம் இங்கிலாந்தில் 5 ஆண்டுகள் தங்கியிருப்பவர்கள் ஆங்கில அறிவில் மிகவும் பின் தங்கியுள்ளனர். அவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், திறமையை வளர்த்து கொள்ளவும் அரசு ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளது.

இதன் மூலம் அவர்களுக்கு வீடுகள், பள்ளிகள் மற்றும் சமுதாய மையங்களில் ஆங்கில வகுப்புகள் நடத்தப்படும். அதில் அவர்கள் கற்றுத் தேர்வு பெறலாம். அவர்களின் ஆங்கில திறமை அறிய 2½ ஆண்டுகளில் தேர்வு நடத்தப்படும். அதில் அவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply