சச்சின் டெண்டுல்கர் கடைசியாக விளையாடும் டெஸ்ட் போட்டியை பார்க்க மும்பை வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா நிருபர்களிடம் கூறியதாவது:-

எனக்கு மகன் இருந்து அவன் கிரிக்கெட் விளையாட விரும்பினால் அவனிடம், நான் விளையாடிய கிரிக்கெட் ஆட்டங்களின் வீடியோ காட்சியை பார்க்காதே; டெண்டுல்கரின் வீடியோ காட்சிகளை பார்த்து பழகிக்கொள். எந்த மாதிரியான பந்து வீச்சையும் துல்லியமான நுட்பத்துடன் அணுகக் கூடியவர் அவர்தான் என்று ஆலோசனை வழங்குவேன். நான் பார்த்தவரையில், அவர் கையாளும் நுணுக்கங்கள்தான் உலகின் தலை சிறந்தது. அவரிடமிருந்து இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வளவு நீண்ட காலம் அவர் கிரிக்கெட் விளையாடுவது வியப்புக்குரியது. எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நுழைந்தார். ஆனால் நான் ஓய்வு பெற்று 6 ஆண்டுகள் கழித்து தான் அவர் ஓய்வு பெறுகிறார்.

கடந்த 24 ஆண்டுகளாக அவர் வெற்றிகரமாக நீடிப்பதற்கு அவரது தனித்திறமை, அர்ப்பணிப்பு உணர்வு, உடல்தகுதி ஆகியவையே காரணம். 1.3 பில்லியன் (130 கோடி) மக்களுக்காக விளையாடுவது கடினம் என்பதை நான் அறிவேன்.

இவ்வாறு பிரையன் லாரா கூறினார்.

Leave a Reply