விற்பனைக்கு வந்துவிட்டது புதிய Z4. இது ஃபேஸ்லிஃப்ட் என்பதால், பழைய Z4 மாடலுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசங்களைக் கண்டுபிடிப்பது சற்று சிரமம்தான். உற்று நோக்கினால், பம்ப்பர் டிஸைனில் மாற்றங்கள் தெரிகின்றன. க்ரில்களில் க்ரோம் சேர்க்கப்பட்டுள்ளது. ஹெட்லைட்டுகளின் டிஸைன் கொஞ்சம் மாறியிருக்கிறது. அலாய் வீல் டிஸைனும் புதிது. மற்றபடி, ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கும் பழைய மாடலுக்கும் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை.

Z4 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இன்டீரியர், வழக்கமான sDrive35i மற்றும்  sDrive35i டிஸைன் ப்யூர் ட்ராக்ஷன் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த இரண்டுக்கும் உள்ள ஒரே வித்தியாசம், டிசைன் ப்யூர் டிராக்ஷன் மாடலில் கிடைக்கும் ‘வேலன்சியா ஆரஞ்ச்’ பெயின்ட் ஷேடும், அதற்கு மேட்ச்சாக இன்டீரியர் பாகங்களில் சிலவற்றில் கொடுக்கப்பட்டுள்ள அதே வண்ண பெயின்ட்டும்தான். முழுக்க முழுக்க மெட்டல் பாடிகொண்ட ஹார்ட் டாப் மோடில்தான், இதன் கேபின் இட வசதியும் ஹெட்ரூமும் மோசம் என்பதை உணர முடிகிறது.

பழைய Z4 காரில் இருந்த அதே 3.0 லிட்டர் ட்வின் டர்போ இன்ஜின்தான் இதிலும் இருக்கிறது. 302 bhp சக்தியை அளிக்கும் இந்த இன்ஜினின் திராட்டில் ரெஸ்பான்ஸ், செம ஸ்மூத். 7-ஸ்பீடு ட்வின் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் செயல்பாடும் கச்சிதம். இன்ஜினை அதன் போக்கில்விடாமல், அதன் பவர்பேண்டில் சரியாக வைத்திருக்கிறது. 0-100 கி.மீ வேகத்தை 6.1 விநாடிகளில் அடைந்தாலும் அடுத்த 4 விநாடிகளில் மணிக்கு 140 கி.மீ வேகத்தைக் கடந்துவிடுகிறது Z4. இந்த இன்ஜினின் மிட் ரேஞ்ச் சிறப்பாக இருப்பதால், டிராஃபிக்கில் ஓட்டுவது எளிது. நெடுஞ்சாலையில் ஓவர்டேக் செய்வதற்கும் மெனக்கெடத் தேவை இல்லை.

 

Z4 காரின் கையாளுமையும் சிறப்பாகவே இருக்கிறது. க்ரிப் அதிகமாகவும் பாடி ரோல் குறைவாகவும் இருப்பதால், வேகமாக பறக்கத் தூண்டுகிறது. ஸ்டீயரிங்கும் ஒரு பக்கா பிஎம்டபிள்யூ காருக்கான அம்சங்களுடன் இருந்தாலும் செம ஸ்போர்ட்டி என்று சொல்ல முடியவில்லை.

 

எல்லா கன்வெர்ட்டிபிள் கார்களைப்  போலவும் இதிலும் ஸ்திரத்தன்மை குறைவாகத்தான் உள்ளது. இதனால், ஒரு பக்கா பிஎம்டபிள்யூ காருக்கான ஃபீல் Z4-ல் கிடைக்கவில்லை.

Z4 காரின் டிசைன் ப்யூர் டிராக்ஷன் ட்ரிம்மில் விலை, 88,24,888 ரூபாய். கையாளுமையில் பெயர்பெற்ற மிட்-இன்ஜின் காரான போர்ஷே பாக்ஸ்டர் அளவுக்கு, Z4 கார் இல்லை!

Leave a Reply