shadow

15வாழ்க்கையில் ஒருபோதும் அலட்சியமாக இருக்கக் கூடாது என்பதற்காக, கடவுள் எங்களுக்குக் கொடுத்த வரமாத்தான் இந்த பார்வையின்மையை நாங்க எடுத்துக்கிறோம்!”

– உடன்பிறப்புக்கள் மணிகண்டன், மணிமேகலை ஆகியோரின் பேச்சு முழுக்க நேர்மறை எண்ணங்கள்தான் நிறைந்து கிடக்கின்றன!

வேலூர் மாவட்டம், சேர்க்காடு கிராமத்தில் குழாயில் தண்ணீர் பிடித்து எடுத்துச் சென்றுகொண்டிருந்த பெண்ணிடம், ‘இங்க மணிமேகலை வீடு..?’ என்று கேட்டபோது…

”நான்தான் மணிமேகலை!” என்று அவர் நிமிர, பேச்சற்று நாம் நின்ற அந்த நொடிகள், நம் ஆச்சர்யத்தை அவருக்கு உணர்த்தியிருக்கும். வீட்டுக்கு அழைத்துச் சென்றவர், அண்ணன் மணிகண்டனை அறிமுகப்படுத்தினார்.

”வறுமைப்பட்ட குடும்பம் எங்களோடது. அம்மா வள்ளி, ‘100 நாள் வேலை’க்குப் போறாங்க. அப்பா குப்பனுக்கு கூலி வேலை. நானும் தங்கையும் பிறக்கும்போதே கண்பார்வை இல்லாம பிறந்தோம். அப்பா, அம்மா எங்களை ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா தூக்கிட்டு ஓடினப்போ, ‘சொந்தத்துல திருமணம் செய்திருக்கீங்க… அதனாலதான் இப்படி’… ‘கண்ணுக்குப் போற நரம்பு கட் ஆகியிருக்கு… இதை சரிபண்ண முடியாது’னு ரெண்டுவிதமா காரணங்கள் சொன்னாங்க” என்று மணிகண்டன் நிறுத்த,

”கண்பார்வை இல்லாததை நினைச்சு, சின்ன வயசுல நானும் அண்ணனும் அழுதுட்டே இருப்போம். பத்தாவது படிக்கும்போது, ‘பார்வை இல்லைனு உறுதியான பிறகு, வாழ்க்கை முழுக்க அழுதாலும் சரியாகிடுமா? அதனால மனசார அதை ஏத்துக்கிட்டு, இந்த நிலையிலும் என்னென்ன முயற்சிகள் செய்ய முடியுமோ, செய்வோம்’னு ரெண்டு பேரும் உறுதியெடுத்தோம்.

அந்த உண்மையை உணர்ந்த நொடியில இருந்து, ஏக்கம், ஆதங்கம், அழுகையில் இருந்தெல்லாம் விடுபட்டு வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் முழுமை அடைஞ்சோம். எங்களோட அந்த முதிர்ச்சி, எங்கப்பா, அம்மாவுக்கும் ஆறுதலா இருந்துச்சு. ‘படிப்புதான் உங்களுக்குப் பிடிமானமா இருக்கும். ஆனாலும், உங்களுக்கு என்ன பிடிக்குதோ செய்யுங்க… அதுக்கு வேணுங்கிறதை முடிஞ்சவரை செய்றோம்’னு சொன்னாங்க.

ரெண்டு பேருமே ஆரம்பத்திலிருந்து ஒரே வகுப்புலதான் படிச்சோம். எட்டாம் வகுப்பு வரை வேலூர் மாவட்ட கில்ட் ஆஃப் சர்வீஸ் பள்ளி, பத்தாம் வகுப்பு வரை சென்னை – தேனாம்பேட்டை, லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட் பள்ளி, ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ ஆரணியில் உள்ள நிர்மலா மாதா உயர்நிலைப் பள்ளினு, எங்க படிப்புக்காக ஊர்ஊரா சேர்த்துவிட்டு கூடவே அலைஞ்சாங்க அப்பாவும், அம்மாவும்…” என்றபோது, மணிமேகலையின் குரலில் நெகிழ்வு.

பெற்றோரின் இந்த மெனக்கெடல்களுக்கு, மதிப்பெண்கள் மூலம் நன்றி சொல்லியிருக்கிறார்கள் பிள்ளைகள். மணிமேகலை பத்தாம் வகுப்பில் 419, பன்னிரண்டாம் வகுப்பில் 1,018 மதிப்பெண்கள் என எடுத்துள்ளார். மணிகண்டன் பத்தாம் வகுப்பில் 397, பன்னிரண்டாம் வகுப்பில் 848 மதிப்பெண்கள் என எடுத்துள்ளார். இப்போது இருவரும் வேலூர், முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் முதலாம் ஆண்டு படிக்கிறார்கள்.

”தினமும் 25 கிலோ மீட்டர் பயணம் செய்துதான் கல்லூரிக்கு வர்றோம். காலையில ஏழு மணிக்கு அம்மா எங்களைக் கூட்டிட்டு வந்து பஸ் ஏத்திவிடுவாங்க. பஸ்ல இருந்து இறங்கி கிளாஸுக்குப் போறது வரை சீனியர் அனுராதா அக்கா கூட்டிட்டு வருவாங்க. சமயங்கள்ல அவங்களுக்கு சீக்கிரமே வகுப்பு முடிஞ்சாலும், எங்களுக்காக காத்திருந்து கூட்டிட்டு வருவாங்க” எனும் மணிகண்டனும், மணிமேகலையும் பார்வையற்றவர்களுக்கெனவே பிரத்யேகமாக இருக்கும் ‘பிரெய்லி முறை’யில் படிக்கிறார்கள்.

”வீட்டுல எங்க வேலைகளை நாங்களே பார்த்துக்குவோம், அம்மாவுக்கும் கொஞ்சம் வேலைகள் பார்த்துக் கொடுப்போம். வீட்டிலிருந்து கடைக்கு, பைப்புக்கு இத்தனை அடினு கணக்குப் பண்ணி நடக்கப் பழகிக்கிட்டதால, இந்த வேலைகளை எல்லாம் நாங்களே செய்வோம்” என்று இருவரும் சொல்ல, கண்களை மூடியபடி பத்து அடி தூரம் நடப்பது போல நினைத்துப் பார்த்த நமக்கு, அவர்களின் முயற்சி மீதான மரியாதை, இன்னும் கூடியது.

”டி.வி-யில பாட்டு, படம் எல்லாம் கேட்கறதுதான் பொழுதுபோக்கு. நான் கவிதை எழுதுவேன். என்னோட கவிதை, செய்தித்தாள் நிறுவனம் நடத்தின கவிதைப் போட்டியில முதல் பரிசு பெற்றிருக்கு!” என்ற மணிமேகலை, அந்தக் கவிதையை ஆர்வமுடம் பகிர்ந்தார்…

”…இன்று தோல்விகள் தந்த கண்ணீரை
நாளை வெற்றி வந்து துடைத்துவிடும்…”

நம் பாராட்டுக்கு சந்தோஷமாகச் சிரிக்கும் மணிமேகலைக்கு, பி.எல் படிக்க வேண்டும் என்பது இலக்கு.

பி.எட் படிப்பை இலக்காக வைத்திருக்கும் மணிகண்டன், ”பள்ளியில படிக்கும்போது ஆசிரியர்களும், நண்பர்களும் பள்ளி முடிந்த பிறகும் எங்களுக்கு பாடம் சம்பந்தமான சந்தேங்களை எல்லாம் தீர்த்து வைப்பாங்க. ஆனா, கல்லூரியில் அந்த ஆதரவு இல்லை. அதனால, கொஞ்சம் சிரமமா இருக்கு. பி.எட் படிச்சுட்டு, எங்களைப் போல பார்வையற்ற மாணவர்களுக்கு பாடம் எடுக்கணும்ங்கிறதுதான் லட்சியம்” என்கிறார் குரலில் உறுதியைக் கூட்டிக்கொண்டு! இவருடைய பொழுதுபோக்கு… சதுரங்கம் விளையாடுவது!

– இந்த பாஸிட்டிவ் எண்ணம், இவர்களை இன்னும் வெகு தூரம் அழைத்துச் செல்லட்டும்!  

Leave a Reply