shadow

வரதட்சணை கால்குலேட்டர் இணையதளத்துக்கு தடையா? மேனகா காந்தி கடிதம்

மணமகனின் தகுதிக்கேற்ப கொடுக்க வேண்டிய வரதட்சணை குறித்து அறிய, ‘வரதட்சணை கால்குலேட்டர்’ என்ற பெயரில் சமீபத்தில் தொடங்கப்பட்ட இணையதளத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா கடிதம் எழுதியுள்ளார்.

வரதட்சணை கால்குலேட்டர் என்ற இணையதளத்தில், மணமகனின் வயது, ஜாதி, கல்வித் தகுதி, தொழில், வருமானம், நிறம், உயரம் மற்றும் மணமகனின் தந்தையின் தொழில் குறித்த விபரங்களை பதிவு செய்தால், பெண் வீட்டார் தர வேண்டிய வரதட்சணை தொகையை தெரிந்து கொள்ளலாம் என்ற ஒரு கடந்த சில நாட்களாக தகவல் வருகிறது.

இந்த இணையதளத்திற்கு சமூக ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, மேனகாவும் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத்துக்கு, மேனகா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நம் நாட்டில் வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம். வரதட்சணை கால்குலேட்டர் என்ற பெயரில், சட்டவிரோதமாக புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதள செயல்பாடு தொடர்ந்தால், வரதட்சணை வாங்குவதை ஊக்குவிப்பது போலாகும். எனவே, இந்த இணைய தளத்துக்கு உடனடியாக தடை விதித்து, அதை உருவாக்கியவர்கள் மற்றும் செயல்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மேனகா காந்தி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply