சென்னை : சென்னையில் ஓடும் ஆட்டோக்கள் மீட்டர்களை திருத்தியமைக்க நவம்பர் 15ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ஆட்டோ கட்டணத்தை திருத்தியமைக்க ஆகஸ்ட் 25ம் தேதி உத்தரவிடப்பட்டது. மாற்றியமைக்கப்பட்ட கட்டணத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய அக்டோபர் 15ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டது.

சென்னையில் இயக்கப்படும் 71,470 ஆட்டோக்களில், கடந்த 10ம் தேதி நிலவரப்படி 61,235 ஆட்டோக்களுக்கு, திருத்தியமைக்கப்பட்ட புதிய கட்டண அட்டை வழங்கப் பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், 24,849 ஆட்டோக்களுக்கு தற்போதுள்ள மீட்டர்களிலேயே கட்டணங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள ஆட்டோக்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட கட்டண அட்டைகள் வழங்கும் பணியும், தற்போதுள்ள மீட்டர்களில் கட்டணங்களை திருத்தி அமைப்பதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இந்த பணிகள் முழுவதுமாக முடியாமல் உள்ளது. மேலும், ஆட்டோ மீட்டர் பழுதுபார்க்க கூடுதல் நேரம் தேவைப்படுகிறது.

எனவே, ஆட்டோ மீட்டரை திருத்தியமைக்க நவம்பர் 15ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது என முதல்வர் ஜெயலலிதா நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆட்டோ கட்டணம் நிர்ணயித்ததை தொடர்ந்து சென்னையில் ஆட்டோக்கள் பலவும் அதை கடைப்பிடித்து வந்தன. ஆனால், சமீப காலமாக தொடர்ந்து அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்டோ கட்டணம் அதிகமாக கேட்கும் நிலை மீண்டும் ஆரம்பித்து விட்டது.

மீட்டர் பொருத்தாத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆங்காங்கு அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர். இந்த சோதனையும் திடீரென நிறுத்தப்பட்டது.
இதனால் மீண்டும் ஆட்டோக்கள் பலவும் கூடுதல் கட்டணத்தை நிர்ப்பந்திக்க ஆரம்பித்து விட்டன.

Leave a Reply