‘‘ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் நான்கு சாட்சிகள் 16ம் தேதி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும்’’ என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மந்தைவெளியை சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி உள்பட 3 பேர் கடந்த 2002ம் ஆண்டு தாக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, 2004ல் ஜெயேந்திரர், ரகு, அப்பு, சுந்தரேச அய்யர் உட்பட 12 பேர் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கின் விசாரணை சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கில் அரசு தரப்பில் 81 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கு தொடர்பாக ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, பணியாளர், சங்கரராமன் மகன் ஆன்ந்த் சர்மா உட்பட 21 பேர் இதுவரை சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வழக்கு செஷன்ஸ் கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி தண்டபாணி விசாரித்தார். அப்போது வழக்கின் சாட்சிகளான தலைமைக் காவலர் ராமகிருஷ்ணன், காவலர் கண்ணன் ஆகியோர் ஆஜராகினர். பிறகு கண்ணன் நீதிபதியிடம் சாட்சியம் அளிக்கையில், ‘‘ஆடிட்டர் ராதாகிருஷ்ணனுக்கு பெயரிடப்படாத கடிதங்கள் வந்தது உண்மைதான்’’ என தெரிவித்தார். தலைமைக் காவலர் ராம கிருஷ்ணன் ‘‘இவ்வழக்கில் சில சந்தேகங்கள் இருக்கின்றன’’ என சாட்சியம் அளித்தார். பிறகு நீதிபதி தண்டபாணி, இந்த வழக்கின் சாட்சிகள் உஷாராணி, ராமு, மதியழகன், சந்தானம் ஆகிய நான்குபேர் வரும் 16ம் தேதி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Leave a Reply