தூத்துக்குடி: இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்த அமெரிக்க கப்பலில் இருந்த 33 பேரை கியூ பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். கப்பலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 35 அதிநவீன துப்பாக்கிகள், 5 ஆயிரத்து 675 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.தூத்துக்குடியிலிருந்து 10.48 கடல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கிடமாக நின்ற அமெரிக்காவின் தனியார் செக்யூரிட்டி நிறுவனமான அட்வென் போர்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ‘சீமென் கார்டு ஓகியா’ என்ற கப்பலை கடந்த 11ம் தேதி இந்திய கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.இதுகுறித்து, இந்திய எல்லைக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தது, மீனவர்கள் சிலரிடம் திருட்டுத்தனமாக 2 ஆயிரம் லிட்டர் டீசல் வாங்கியது என தருவைகுளம் மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு க்யூ பிரிவுக்கு மாற்றப்பட்டது.நேற்று அதிகாலை 3.30 மணிக்கு எஸ்.பி.க்கள் பவானீஸ்வரி, துரை மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை யினர் உள்ளிட்ட போலீசார் கப்பலில் இருந்த 35 துப்பாக்கிகளையும், 5 ஆயிரத்து 680 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து கப்பலில் இருந்த 33 பேரை போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து முத்தையாபுரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.கப்பல் பராமரிப்பு மற்றும் கப்பல் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொள்ள வசதியாக கப்பல் கேப்டன் மற்றும் இன்ஜினியர் ஒருவர் மட்டும் கப்பலிலேயே இருக்கின்றனர்.

இருவருக்கும் காவலாக ஆயுதமேந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்ட வர்களை வரும் 31ம் தேதி வரை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தர விட்டார். இதையடுத்து 6.40 மணிக்கு 33 பேரும் பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடியிலிருந்து பாளையங்கோட்டை கொண்டு வரப்பட்டு அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை சென்னை புழல் சிறைக்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply