ஒசூர் அருகே  சொத்துக்காக கொலை மற்றும் கொலை முயற்சிகள் நடந்துள்ளது. இந்தத் தகராறில் நேற்று இருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கர்நாடக எல்லையில் ஆலூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 40). இவரது நண்பர் திம்மராயப்பா (வயது 60). இவர்கள் இருவரும் விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்கள். ரவிக்கு மட்டும் 60 ஏக்கர் நிலம் உள்ளது.

நேற்று இரவு இவர்கள் பெங்களுரில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்த்துவிட்டு ஆலூருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். சேலத்தில் கடந்த மாதம் புதிதாக வாங்கிய பொலரோ ஜீப்பில் அவர்கள் திரும்பிக் கொண்டு இருந்தனர்.

அந்தக்காரில் பதிவு எண் (டி.என்.30 ஏ.யு.டி, 0486) என்று மார்க்கர் பேனாவால் எழுதப்பட்டு இருந்தது.
அந்த பொலரோ ஜீப்பை ஒரு கார் கர்நாடக மாநிலம் சம்பங்கிரி என்னும் இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு துரத்தி வந்தது. தமிழக எல்லையில் பாகலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஒப்பச்சிபள்ளி மேட்டுப்பகுதியில் வந்த போது பின்னால் காரில் வந்த டிரைவர் பொலீரோ ஜீப்பை வழி மறித்து நிறுத்தினார்.

ரவியிடம் கார் டிரைவர் விலாசம் கேட்டுக்கொண்டு இருந்தார். அப்போது காரில் இருந்த ஒருவர் பொலரோ ஜீப்பில் இருந்த ரவி உள்பட 2 பேரையும் சரமாரியாக சுட்டார். இதில் 2 பேர் உடலிலும் 5 குண்டுகள் முதல் 6 குண்டுகள் வரை பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். 3 குண்டுகள் ரோட்டில் சிதறி கீழே விழுந்தது. துப்பாக்கி குண்டு பாய்ந்த அலறிய அவர்கள் 2 பேரையும் பொதுமக்கள் மீட்டு பெங்களுரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டு குண்டுகள் அகற்றப்பட்டது. அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நேற்று இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், துணை கண்காணிப்பாளர் கோபி (ஒசூர்), ராதா கிருஷ்ணன் (தேன்கனிக்கோட்டை), சந்தான பாண்டியன் (கிருஷ்ணகிரி) மற்றும் பாகலூர் இன்ஸ்பெக்டர் தணிகாசலம் ஆகியோர் விரைந்து வந்து சம்பவ இடத்தையும் ஜீப்பையும் பார்வையிட்டனர். அங்கு சிதறி கிடந்த 3 குண்டுகளை கைப்பற்றினர்.

இந்த சம்பவம் குறித்து பாகலூர் காவல்துறையினர் உடனடியாக விசாரணையை தொடங்கினார்கள். விசாரணையில் ரவியின் சித்தி திம்மம்மாவை கொன்ற கும்பலை சேர்ந்தவர்கள் ரவி மற்றும் திம்மராயப்பா ஆகியோரை கொல்ல முயன்றது தெரிய வந்து உள்ளது.

திம்மம்மா கர்நாடக மாநிலம் மாலூர் அருகே உள்ள ஒப்பச்சிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு 12 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த மாதம் இவர் திடீரென்று மாயமாகி விட்டார். பின்னர் திம்மம்மா ஓசூரை அடுத்த தென்பெண்ணை ஆற்றில் சாக்கு மூட்டையில் பிணமாக மீட்கப்பட்டார். 5 பேர் கும்பல் திம்மம்மாவை கடத்தி வந்து கொலை செய்து விட்டு சாக்கு மூட்டையில் கட்டி வீசி சென்றது தெரிய வந்தது. 12 ஏக்கர் நிலத்தை அபகரிக்க நடந்த இந்தக்கொலையில் குற்றவாளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க ரவியும், அவரது நண்பர் திம்மராயப்பாவும், போலீசாருக்கு உதவியாக இருந்தனர். மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவும் பாடுபட்டு உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கொலைக் கும்பலை சேர்ந்தவர்கள் ரவி உள்பட 2 பேரையும் கடந்த சில நாட்களாக பின் தொடர்ந்து வந்து நேற்று இரவு தங்களது திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர். இவர்களை சுட்ட கும்பலை பிடிக்க தனிப்படை பெங்களுர் விரைந்து உள்ளது.

Leave a Reply