அசாம் மாநிலம் துப்ரி மாவட்டம் கோல்கோலி கிராமத்தை சேர்ந்த சிலர், காம்ருப் மாவட்டம் ரங்கியா பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் தங்கி பணியாற்றுவதற்காக 2 மினி பஸ்களில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். பார்பெட்டா மாவட்டம் தோலாபாரா அருகே நேற்று அதிகாலை 4.30 மணியளவில் 2 மினி பஸ்களும் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன.

அப்போது எதிர்திசையில் இருந்து 10 சக்கரங்கள் கொண்ட மிகப்பெரிய சரக்கு லாரி ஒன்று வேகமாக வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த லாரி, மினி பஸ்கள் மீது ஒன்றன் பின் ஒன்றாக மோதியது. இதில் 2 மினி பஸ்களும் தலைகுப்புற கவிழ்ந்து நொறுங்கின. வேனில் இருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளேயே நசுங்கினர். இந்த கோர விபத்தில் 13 குழந்தைகள் உட்பட 30 பேர் பலியாயினர்.

காயம் அடைந்த 20 பேர் பார்பெட்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் பலியானதால், அந்த கிராமம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. பலியானவர்களில் பலர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

Leave a Reply