shadow

dgpதமிழகக் காவல் துறையின் சட்டம், ஒழுங்கு டிஜிபியாக அசோக் குமார் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. பதவி நீட்டிப்பில் டி.ஜி.பி.யாக இருந்து செவ்வாய்க்கிழமையுடன் பணி நிறைவடையும்  கே.ராமானுஜத்தை மாநில அரசின் ஆலோசகராக நியமித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகக் காவல் துறையின் சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இருந்த கே.ராமானுஜம் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையொட்டி, அந்தப் பணியிடத்துக்கு தமிழகக் காவல்துறையின் உளவுத்துறை டி.ஜி.பி.யாக பணிபுரிந்துகொண்டிருந்த அசோக் குமாரை நியமனம் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத் நேற்று வெளியிட்டார்.

இந்நிலையில் இன்றுடன் ஓய்வு பெறும் டி.ஜி.பி. ராமானுஜம் அவர்களை தமிழக அரசின் ஆலோசகராகவும்  நியமித்து உள்துறை முதன்மைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.

புதிய டி.ஜி.பி. யாக நியமனம் செய்யப்பட்டுள்ள அசோக் குமார், ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர். 15-6-1955 -ஆம் ஆண்டு பிறந்த அசோக் குமார், எம்.காம். எம்.பில். படித்துள்ளார். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் பேசவும் எழுதவும் செய்வார்.

 அசோக் குமார் கடந்த 1982 -ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று, தமிழகப் பிரிவு அதிகாரியாக பணியில் சேர்ந்தார். முதல் பணியாக அவர் மதுரை மாவட்டம், திருமங்கலம் உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்தார். இதேபோல, தமிழகக் காவல்துறையின் பல்வேறு நிலைகளில் அசோக் குமார் பணிபுரிந்துள்ளார். 2013 -ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மத்திய அரசுப் பணியாக,  சி.பி.ஐ.யின் தெற்கு மண்டல இணை இயக்குநராக அசோக் குமார் இருந்தார்.  பின்னர் தமிழக அரசுப் பணிக்குத் திரும்பிய அசோக் குமார், தமிழகக் காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.

அதையடுத்து,  தமிழகக் காவல்துறைக்குள்பட்ட உளவுத் துறையின் ஏ.டி.ஜி.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.  தமிழகக் காவல்துறையின் சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள அசோக் குமார், இரண்டு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகக் காவல்துறையின் சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருந்த ராமானுஜம்,  கடந்த 1978 ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார். 2012 -ஆம் ஆண்டு தமிழகக் காவல்துறையின் சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருந்த அவர் ஓய்வு பெற்றார்.

 எனினும், ராமானுஜத்துக்கு இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிப்பை தமிழக அரசு வழங்கியது. இந்தப் பதவி நீட்டிப்பு செவ்வாய்க்கிழமை நிறைவடைகிறது. ராமானுஜத்தின் பதவி நீட்டிப்பு முடிவுக்கு வருவதை முன்னிட்டு, சென்னை பரங்கிமலையில் ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணியளவில் அவருக்கு பிரிவுபசார நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 இந்த நிகழ்ச்சியில், தமிழகக் காவல்துறையின் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். பணி நிறைவுக்குப் பிறகு, தமிழக அரசின் ஆலோசகராக ராமானுஜம் தொடர்ந்து செயல்படுவார்.

Leave a Reply